2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக மக்கள் தெரிவுசெய்வார்கள் – இந்திக அனுருத்த


தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்து அரசியல் ரீதியில் இழைத்த தவறை திருத்துவதற்கு மக்கள் தயாராகியுள்ளார்கள். ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மக்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாமல் ராஜபக்‌ஷவை எவ்வழியிலாவது நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடைமுறைக்கு சாத்தியமற்ற பல வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பதை மக்கள் இன்று தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக இன்று திரும்பியுள்ளார்கள். ஆட்சியாளர்கள் மீதும், ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின்போது அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானம் முற்றிலும் தவறானது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள். அந்த தவறை திருத்திக் கொள்வதற்கு மக்கள் தயாராகவுள்ளார்கள். அதனால் மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க ஒன்றிணைந்துள்ளார்கள்.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நாமல் ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். இதனை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. இதனால் நாமல் ராஜபக்‌ஷவை எவ்வழியிலாவது நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் மாபெரும் மக்கள் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.நாடளாவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்துவோம் என்றார்.