22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை



22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலிக்கப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளது.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் நீதிபதிகள் அமர்வு நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி, இன்று காலை 10 மணி முதல் உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.