போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்ததாக சந்தேகம் – ரூ. 475 இலட்சம் சொத்துக்கள் முடக்கம் : தம்பதி கைது



சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 470 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

பதவிய பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் கிடைத்த முறைப்பாடு, பொலிஸ் மா அதிபரினால் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்விசாரணைகளின் போது, குறித்த நபர் சட்டவிரோத வழிகளில் ஈட்டிய பணத்தின் மூலம் புதிய நகர பதவிய பகுதியில் அவரது மனைவியின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட 275 இலட்சம் ரூபா பெறுமதியான 15 பேர்ச் காணியும் அதில் கட்டப்பட்டுள்ள இருமாடி கட்டிடமும், அனுராதபுரம், விஜயபுர பகுதியில் அமைந்துள்ள 120 இலட்சம் ரூபா பெறுமதியான 15 பேர்ச் காணியும் அதிலுள்ள வீடும், 65 இலட்சம் ரூபா பெறுமதியான வேன் வண்டி ஒன்று மற்றும் 15 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய லொறி வண்டி ஒன்று போன்ற சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டம் கீழ் குற்றமிழைத்தமையின் பேரில், பதவிய பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய சந்தேகநபரும், அவரது 45 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 475 இலட்சம் ரூபா பெறுமதியான மேற்காண் சொத்துக்கள் நேற்று 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு முடக்கி வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.