பொலிஸ் மரியாதையுடன் ஓய்வு பெற்றார் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண



வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹண பொலிஸ் திணைக்களத்திலிருந்து இன்று (08) ஓய்வுபெற்றார்.

தனது முப்பத்தெட்டு வருட சேவையை நிறைவு செய்த பின்னரே அவர் இவ்வாறு ஓய்வுபெற்றுள்ளார்.

அவரது ஓய்வை முன்னிட்டு குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் பொலிஸ் மரியாதைப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹண, இலங்கை பொலிஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதி பொலிஸ்மா அதிபரானவர் என்ற வரலாற்றைப் படைத்தவருடன், சட்டக் கல்வியியலாளர் (LL.B) மற்றும் சட்டத்தரணியாகவும், பொதுமக்கள் மரியாதையைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும் விளங்குகிறார்.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ஒரு விசேட தொடர்பாடல் பணியை ஆற்றிய அவர், தனது தொழில்முறைத் திறமை மற்றும் எளிமையான, நட்பான குணங்களினால் மக்களிடையே பெரிதும் பிரபலம் அடைந்தார்.

அவிசாவளையின் கொஸ்கம பகுதியில் பிறந்த அவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார் என்பதுடன், பாடசாலைக் காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டத்தைப் பெற்ற அவர், உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியுமாவார்.

அத்துடன், 2020 ஆம் ஆண்டில் பொது மக்கள் சேவையைக் கௌரவிக்கும் வகையில் அவருக்குக் கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டது.

இதேவேளை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் மற்றும் தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.