உள்ளுராட்சி மன்றம் தொடர்பான சட்டத்தை திருத்த அனுமதி



மாநகரசபைகள், நகரசபைகள் கட்டளைச் சட்டங்கள் மற்றும் பிரதேச சபைகள் சட்டம் ஆகிய மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
 
மேலும் 7 சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, காலத்திற்கு ஒவ்வாத விடயங்களைக் கொண்ட உள்ளூராட்சி தொடர்பான சட்டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட பிரதேச சபை மண்டபத்தில் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்காக அமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் ருவன் செனரத் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமான அரசாங்க நிர்வாக மட்டமாக பல்வேறு பொதுச் சேவைகளையும் அபிவிருத்திப் பணிகளையும் ஆற்றி வருகின்றன.

அப்பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் போது சபை நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான விடயங்கள் தொடர்பில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே, அந்தப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, சட்டப்பூர்வமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைக் காண்பதற்காக நிறுவனத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் தொழிற்துறை ஆற்றல்களை மேம்படுத்துவதே இந்தப் பயிலரங்கின் முதன்மை நோக்கமாகும்.

இப்பயிலரங்கில் சபை அமர்வுகள் மற்றும் தீர்மானம் எடுக்கும் நடைமுறைகள், சபை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், குழுக்களின் நடவடிக்கைகள், கொள்முதல் நடைமுறையின் கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகள், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள், அத்துடன் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நடைமுறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உள்ளூராட்சி மன்றங்களின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது எழும் தற்போதைய நிர்வாக, சட்ட மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து திறந்த கலந்துரையாடலுக்கும் அனுபவப் பகிர்வுக்கும் இந்தப் பயிலரங்கில் வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதன்மூலம் நிறுவனத் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பொதுச் சேவை வழங்கலின் திறனை உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.