எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த நெதர்லாந்து யுவதி உயிரிழப்பு



எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய வெளிநாட்டு யுவதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (24) தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரு வெளிநாட்டு யுவதிகள் குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எல்ல சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேச மக்களின் உதவியுடன், கடும் சிரமங்களுக்கு மத்தியில் உயிரிழந்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டு, 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்வீழ்ச்சியை பார்வையிடச் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் எல்ல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.