‘கறுப்பு அரசியல் கலாசாரத்தை அடியோடு ஒழித்து நாட்டைத் தூய்மைப்படுத்துவோம்’ – ஜனாதிபதி அநுர உறுதி



நாட்டை கறுப்பு அரசாக மாற்றியிருந்த முறைமையை முற்றாக மாற்றி, திருடன் - பொலிஸ் விளையாட்டைப் போன்றிருந்த கறுப்பு அரசியல் கலாசாரத்தை அடியோடு ஒழித்து நாட்டைத் தூய்மைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சூளுரைத்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், 'ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி' என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புத் தொடரின் முதலாவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (06) களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நமது நாட்டை ஒரு கறுப்பு அரசாக மாற்றியிருந்த முழுமையான முறைமையை மாற்ற வேண்டியுள்ளது. சிறுவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத, மக்கள் தங்களது எதிர்காலம் மற்றும் சட்டம் தொடர்பில் எந்தவித நம்பிக்கையும் அற்ற நிலை நாட்டில் உருவாகியிருந்தது. இந்தக் கறுப்பு அரசின் பலன்களைப் பெற்றவர்களும், அதன் சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவர்களும்தான் இன்று கலக்கமடைந்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும், பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள் உள்ளிட்ட பல உள்ளூராட்சி அமைப்புகளிலும் பெரும்பான்மை பலமும் உள்ளது. இருப்பினும், அரசாங்கத்தின் பிரதான பலம் மக்களிடமே இருப்பதாகவே நாம் கருதுகின்றோம். நிறைவேற்று அதிகாரமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இருந்த குடும்ப ஆட்சியாளர்கள் கூட இறுதியில் தப்பிச் சென்றனர். உண்மையான சக்தி மக்களிடமே உள்ளது.

நிறைவேற்று அதிகாரம் எங்களிடம் மாத்திரம் இருக்கவில்லை வேறு சிலரும் அவற்றை வைத்திருந்தார்கள் அல்லவா? தப்பிச் சென்றார்கள். நிறைவேற்று அதிகாரம் இருந்து, மூன்றில் இரண்டு பலம் இருந்து, அண்ணன் ஜனாதிபதியாக இருந்து, மற்றைய அண்ணன் பிரதமராக இருந்து, மற்றைய அண்ணன் நிதி அமைச்சராக இருந்து, மற்றைய அண்ணன் சபாநாயகராக இருந்து, மற்றைய பிள்ளைக்கு என்ன இருந்தது? குடும்பம் குடும்பமாக இருந்தவர்கள் தப்பிச் சென்றார்கள்.

திறைசேரிக்கு வர வேண்டிய செல்வம் திறைசேரிக்கு வருவதற்கு முன்னரும், வந்த பின்னரும் பல்வேறு வழிகளில் தனிநபர்களின் வீடுகளுக்குச் சென்றது. அந்த வழிகளைத் தடுத்து, திறைசேரிக்கு வர வேண்டிய செல்வத்தை மீண்டும் திறைசேரிக்குக் கொண்டு வந்ததன் விளைவாக, 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவீதமான அதிகூடிய அரச வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் ஈட்ட முடிந்தது.

நாட்டில் அதிகாரம் மிகவும் மோசமான முறையில் பயன்படுத்தப்பட்டதுடன், மக்கள் அரசியல்வாதிகளுக்குப் பயந்திருந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியுள்ளது. அரசாங்கத்தை விமர்சிக்கவும், போராடவும், ஆட்சியாளர்களைக் கண்டிக்கவும் மக்களுக்கு முழுமையான உரிமை இருக்க வேண்டும். இந்த ஆண்டில், இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்கள் எழுச்சிகளுக்கு எதிராக கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்படாத ஆண்டாக இது அமைந்துள்ளது.

ஊழல் மற்றும் மோசடிகள் கறுப்பு அரசின் அனைத்து மட்டங்களிலும் பரவியிருந்தது. நாட்டின் அரசியல் இதுவரை திருடன் - பொலிஸ் விளையாட்டைப் போன்றே முன்னெடுக்கப்பட்டது. ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மற்றைய தரப்பினரைத் திருடர்கள் எனக் கூறும். பின்னர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் திருடர்கள் எனக் கூறப்படும். இவ்வாறு அரசியல் தொடர்ந்த நிலையில், தற்போது உண்மையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் மற்றும் வழக்குகள் குவிந்துள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது சில விடயங்கள் காலவரையறைச் சட்டத்துக்குள் சிக்கக்கூடிய நிலை உள்ளது. எனவே, அவற்றை விரைவாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்தக் கறுப்பு அரசியலின் ஒரு பகுதியாக இனவாதமும் பயன்படுத்தப்பட்டது. மக்களைப் பிரித்தாளும் அரசியல் முன்னெடுக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் நிதி வழங்கி இனவாத அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஒரு தரப்பில் இஸ்லாமிய தீவிரவாதமும் மற்றொரு தரப்பில் சிங்கள தீவிரவாதமும் வளர்க்கப்பட்டு, ஒருவரையொருவர் மோதிக்கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டது.

இதன் காரணமாக உலகத்தின் முன்னிலையில் நாடு கேலிக்குரிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஒரே நாட்டில் வாழும் குடிமக்களே ஒருவருக்கொருவர் எதிராக மோதிக்கொள்ளும் அரசியல் சூழல் உருவாக்கப்பட்டது. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இந்த இரண்டு ஆண்டுகளில், இனவாத மோதல்கள் தொடர்பாக எந்தவொரு பொலிஸ் முறைப்பாடும் பதிவாகாத நிலை உருவாகியுள்ளது. இந்தக் கறுப்பு அரசியல், கறுப்புப் பொருளாதாரம், கறுப்பு ஊழல் மற்றும் சட்டத்தின் சீர்குலைவு ஆகிய அனைத்தையும் முற்றாக அகற்றி, நாட்டைத் தூய்மைப்படுத்தும் பணியிலிருந்து எவ்வித எதிர்ப்புகள் அல்லது அழுத்தங்கள் வந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்வாங்காது என்றார்.