மக்களுக்குப் பயனளிக்காத அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதில்லை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க


பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புப்பட்டதாக அமைய வேண்டும். மக்களுக்கு பயன்பெறாத அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க போவதில்லை.நீதிமன்ற கட்டமைப்பும் மக்கள் நலனுக்காகவே மறுசீரமைக்கப்படவுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் பொதுப்போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு ஏழு தாழ்தள பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஜப்பான் அரசாங்கமும், ஜப்பான் யோகோஹாமா நகர மக்களும் இணைந்து நன்கொடையாக வழங்கிய இந்த பேருந்துகளை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், அகியோ இசோமதா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் புதன்கிழமை (2) கையளித்தார்.

போக்குவரத்து அமைச்சில் புதன்கிழமை (2) இடம்பெற்ற நிகழ்வின்போது உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

மக்களின் நலனுக்காகவே சகல அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கிறோம்.பொது போக்குவரத்து சேவை மக்களுக்கு நேயமானதாக அமைய வேண்டும். மெற்றோ பேரூந்து சேவை ஊடாக பொது மக்கள் தற்போது நிம்மதியாக பயணம்செய்கிறார்கள்.

எதிர்வரும் காலப்பகுதியில் நாட்டின் சகல பாகங்களுக்கும் மெற்றோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புப்பட்டதாக அமைய வேண்டும். மக்களுக்கு பயன்பெறாத அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க போவதில்லை.

நீதிமன்ற கட்டமைப்பும் மக்கள் நலனுக்காகவே மறுசீரமைக்கப்படவுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கும், கொள்கைக்கும் அமைவாகவே செயற்படுகிறோம் என்றார்.