
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து, அரசாங்க வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக சந்தேகிக்கப்படும் ஐவர் நுவரெலியா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் ஒருவரும், நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் தகவல் தொடர்பு நிலையங்களை நடத்தி வந்த சிலரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் பதில் கணக்காளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி, அவர்களது கையொப்பங்களைப் போலியாக இட்டு சந்தேகநபர்கள் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களால் வழங்கப்பட்ட கடிதங்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட சிலர் மாவட்ட செயலகத்தை அணுகியுள்ளனர். இதன்போது குறித்த கடிதத் தலைப்புகள், முத்திரைகள் மற்றும் கையொப்பங்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நுவரெலியா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து போலி முத்திரைகள், கடிதத் தலைப்புகள் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கணினிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தனது பெயர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளரின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாகக் கூறியும் பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் மேலும் சிலருக்குத் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நுவரெலியா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)
.jpg)




.jpg)

.jpg)