ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுவதோ அல்லது விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிய விடயமல்ல எனத் தெரிவித்த அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகித்த காலத்திலும் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய வழக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையது என்றும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எயார்பஸ் பரிவர்த்தனையுடன் தொடர்புடைய சுமார் 10 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரித்த பின்னரே நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
“ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்டது. அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான தீர்மானத்தை நீதிமன்றமே எடுத்தது. இதுவே இடம்பெற்ற சட்ட நடைமுறையாகும்” என அவர் கூறினார்.
நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை, அக்கட்சி தற்போது எடுத்துள்ள நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான அறிக்கையைக் கண்டு ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்களும் நீண்டகாலமாக அக்கட்சிக்காகப் பணியாற்றியவர்களும் ஆச்சரியமடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தரப்பினருடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர், அவர்களில் ஒருவர் கைது செய்யப்படும்போது ஊடக அறிக்கைகள் மற்றும் கருத்துகள் ஊடாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொள்வதாகவும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான தீர்மானங்களை நீதிமன்றமே எடுப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.






.jpg)



.jpg)


.jpg)