கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போதைப்பொருள் விற்பனை : இரு ஊழியர்கள் கைது


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மருதானைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரேத அறைக்கு அருகாமையில் வைத்து இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 37 வயதுடைய, மஹியங்கனை மற்றும் பொலன்னறுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வைத்தியசாலையின் பிரேத அறை ஊழியராவார்.

பொரளை - வானத்தமுல்ல பகுதியிலிருந்து போதைப்பொருட்களைப் பெற்று, வைத்தியசாலை ஊழியர்களுக்கும் வெளிநபர்களுக்கும் நீண்டகாலமாக விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், சட்ட மருத்துவப் பரிசோதனையின் போது இவ்விருவரும் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சம்பத் இந்திக குமாரவிடம் வினவியபோது, கைது செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் இருவரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.