பாதாள உலகக் குழுவிற்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கிய 'பொம்புவல சுத்தா' களுத்துறையில் கைது





மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை பாதாள உலகக் குழு நடவடிக்கைகளுக்காகவும் போதைப்பொருள் வர்த்தகத்துக்காகவும் மோட்டார் சைக்கிள்களை விநியோகித்து வந்த சந்தேகிக்கப்படும் "பொம்புவல சுத்தா களுத்துறை குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொடை சந்தியிலுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடிச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது அப்பகுதியிலுள்ள சிசிரிவி கமராக்களை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, களுத்துறை குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், பொம்புவல பகுதியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றபோதே சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டிலுள்ள பதிவு இலக்கங்களை மாற்றும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத்தொடந்து சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காகப் பாதாள உலகக் குழுக்களுக்கு இவர் வழங்கியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் களுத்துறை குற்றப்பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.