நாமல் கைது அரசியல் நோக்கம் கொண்டது; அநுராதபுர பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் – பொதுஜன பெரமுன அறிவிப்பு



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளமை அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடு என்று அக்கட்சி விமர்சித்துள்ளது.

கடந்த 04 ஆம் திகதியன்று நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் அன்றைய தினமே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 2023 ஆம் ஆண்டின் 9அம் இலக்க இலஞ்ச ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இதனை கண்டிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை மிகவும் சந்தேகத்திற்குரியது, எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பாரிய மக்கள் பேரணிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

நாமல் ராஜபக்ஷவின் அரசியல் ரீதியான குரலை ஒடுக்குவதற்கும், அரசாங்கத்திற்கு எதிரான அதிகரித்து வரும் எதிர்ப்பையும் திட்டமிடப்பட்ட பேரணியில் பொதுமக்களின் பங்கேற்பையும் தடுக்கவுமே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதோடு, அவை ஆதாரமற்றவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவையாகும்.

மேலும், விசாரணையில் தொடர்புடைய ஒருவரால் முன்னதாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் முரண்பாடான வாக்குமூலங்களால், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நம்பியுள்ள ஆதாரங்களின் நம்பகத்தன்மை எத்தகையது.

ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்காகவே ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், அவை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக் கூடாது.

அத்துடன், சுயாதீன அரச நிறுவனங்கள் அரசியல் தலையீடுகளின்றி செயற்பட வேண்டும் எனவும், அரச அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு எதிராக சிவில் சமூக அமைப்புகள், நீதித்துறை தொடர்பான நிறுவனங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஆதரிக்கும் பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் திட்டமிட்டபடி மக்கள் பேரணி நடைபெறும். ஒருவரை கைது செய்வதன் மூலம் பரந்த அரசியல் இயக்கத்தின் செயற்பாடுகளை தடுக்கவோ, மக்களின் கோரிக்கைகளை அடக்கவோ முடியாது என்றுள்ளது.