அரசாங்கத்தின் தோல்விகளையும் ஊழல்களையும் மறைக்கவே நாமல் கைது – டி.வி. சானக்க குற்றச்சாட்டு



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையானது, தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளையும் ஊழல்களையும் மறைப்பதற்காக அரங்கேற்றப்பட்ட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீதிமன்றத்தால் ஏற்கனவே பொய்யான சாட்சியாளர் என அறிவிக்கப்பட்ட நிமல் பெரேரா எனும் வர்த்தகரின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 100 வழக்குகள் நிலுவையில் உள்ள குறித்த வர்த்தகர், தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் வர்த்தகப் பங்காளியாவார்.

குறித்த நபர் 50 மில்லியன் ரூபா கொடுத்ததாக முதலில் கூறி, பின்னர் ஒரு ரூபாயும் கொடுக்கவில்லை என மறுத்து, தற்போது 100 மில்லியன் ரூபா கொடுத்ததாக 3 வௌ;வேறான முரண்பாடான வாக்குமூலங்களை அளித்துள்ளார். பணம் கைமாறிய இடம், திகதி அல்லது கணக்கு விவரங்கள் எதுவுமின்றி, 2019 ஆம் ஆண்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் பொய்ப்பித்தன் என நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்ட ஒருவரின் கூற்றை வைத்து இக்கைது இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் அரசியல்வாதிகளைப் பழிவாங்குவதற்கு இத்தகைய தவறான வழிமுறைகள் முன்னுதாரணமாக்கப்படுகின்றன. எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தினுள் இருக்கும் எவரேனும் குரல்கொடுத்தால் கூட, இவ்வாறான பொய்யான சாட்சியங்களை உருவாக்கி அவர்களைச் சிறையிலடைக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

விவசாயிகளுக்கு நெல் கிலோவொன்றுக்கு 150 ரூபா தருவதாக வாக்குறுதியளித்து ஏமாற்றிய அரசாங்கத்திற்கு எதிராக, நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து நாமல் ராஜபக்ஷ தலைமையில் செப்டம்பர் 12 ஆம் திகதி பிரம்மாண்டமான எதிர்ப்புப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் எழுச்சியைக் கண்டு அச்சமடைந்தே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி மோசடி மற்றும் கொள்கலன் மோசடிகளை மறைப்பதற்காகவே இத்தகைய நாடகங்கள் ஊடகங்கள் வாயிலாக அரங்கேற்றப்படுகின்றன. எனினும், இத்தகைய அடக்குமுறைகளுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது நாமல் ராஜபக்ஷவோ ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். திட்டமிட்டபடி 12 ஆம் திகதி பேரணி மிகப்பிரம்மாண்டமாக நடைபெறும் என்றார்.