அரசாங்கத்தின் நாசகார வேலைகளால் நாடும் நீதித்துறையும் ஜனநாயகமும் சீரழிகின்றன – சஜித் குற்றச்சாட்டு
பாதாள உலக குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் உயிரிழப்புகள் ஒருபுறம் இடம்பெறும் நிலையில் மறுபுறம் அரசாங்கத்தின் நாசகார வேலைகளால் நாடும் நீதிமன்றமும் ஜனநாயகமும் சீரழிந்து வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம கொங்வெலான பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் எங்கு பார்த்தாலும் முறைப்பாடுகளையே கேட்கக் கிடைக்கின்றன. மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்விதத் தீர்வுகளும் இல்லை. தற்போது நாட்டில் தரப்புகளுடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் துப்பாக்கிச் சூடுகள் காரணமாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உயிரிழப்புக்களும் காயங்களும் ஏற்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அதேநேரம் அரசாங்கம் 22 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி, நீதி வழங்கும் செயற்பாடு என்பவற்றின் மீதும் மரண அடியை கொடுத்துள்ளது. இதன் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்தை சீரழித்து வருகின்றது.
நாட்டில் பெரும்பாலான மக்கள் நீதித்துறையை மதிப்பதோடு, நீதித்துறையின் தீர்ப்புகள் மீது நம்பிக்கையும் கொண்டுள்ளனர். வேண்டுமென்றே 22 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுக்கு எந்தவித நிவாரணங்களையும் வழங்கவில்லை. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது, துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு எரிபொருளை வழங்குவது போன்றவற்றைச் செய்வதாகக் கூறினாலும் அவை எதுவும் இடம்பெறவில்லை. மக்களின் வாழ்வாதாரமே இதனால் நாசமாகி வருகின்றது.
அதேநேரம் அஸ்வெசும தொகையையும், அதனை பெற்று வரும் பயனாளர்களின் எண்ணிக்கையையும் அரசாங்கம் குறைத்து வருகின்றது. பல பயனாளர்கள் நீக்கப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் அஸ்வெசும அதிகரிக்கப்படும் என்று கூறிய போதிலும் இன்று அது குறைக்கப்பட்டு வருகின்றது. வறுமையை ஒழிப்பதற்கான எத்தகைய காத்திரமான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமும் இத்த அரசாங்கத்திடம் இல்லை.
ஜே.வி.பி. 220 இலட்சம் மக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, ஜனாதிபதி பதவியை பெற்றுவிட்டு, இன்று மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி வரும் வேலைகளை செய்து வருகிறது. இன்று விவசாயி நிர்க்கதியில், விதை மற்றும் உரங்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் யானை-மனித மோதல்களுக்கு மத்தியில் உற்பத்தியை மேற்கொண்டாலும் அவர்களுக்கு நிலையான விலைகள் கிடைத்தபாடில்லை. 150 ரூபா வாக்குறுதியை மீறி விவசாயிக்கு நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தையே இவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். 120 ரூபாவுக்குக் கூட நெல்லைக் கொள்வனவு செய்வதில்லை
தொழில்முயற்சியாளர்களுக்கு தேவையான பக்கபலத்தைப் பெற்றுக் கொடுக்க இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பதிலை. வரி மீது வரி விதிக்கப்படுவதால் தொழில்முயற்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். வரித் தாக்குதல்கள் காரணமாக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்கள் கூட பெரும் அவலத்திற்குள்ளாகி காணப்படுகின்றனர். பராட்டே சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இந்த வியாபாரிகள் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களை தூக்கிவிட அரசாங்கம் கைகொடுப்பதில்லை.
அதனால் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும். இந்த உரிமை நிஜமாக மாற வேண்டும் என்றார்.






.jpg)



.jpg)


.jpg)