விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் செல்ல அனுமதி


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவுக்கு இன்று செவ்வாய்கிழமை (08) நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, நாமல் ராஜபக்‌ஷவை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரமானது இன்று செவ்வாய்கிழமை (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடும் என பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இன்று மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, நாளை (09) புதன்கிழமை பாதுகாப்புப் படைகளின் தலைமை பிரதானி (நீக்கம் செய்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.