“சிறைக் கம்பிகளுக்கு இடையே இருந்து உங்களைப் பார்க்கிறேன்; நீங்கள்தான் எனது பலம்” – ஆதரவாளர்களுக்கு நாமல் செய்தி



தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தான் எதிர்கொள்ளும் சவால்கள் தன்னை வீழ்த்தாது என்றும், மாறாக மேலும் வலிமைப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கு இடையே இருந்து உங்களைப் பார்க்கிறேன். நீங்கள் வழங்கும் உற்சாகமான ஆதரவு எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது” என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கருத்தை மேற்கோள்காட்டிய அவர், சிரமங்கள் சிலரை உடைத்துவிடும் அதேவேளை, சிலரை மேலும் வலிமையானவர்களாக மாற்றும் எனத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது மேலும் வலிமையடையும் மனிதர்கள். சவால்களை எதிர்கொண்டு வலிமையடையும் பாடத்தை எனது அன்புத் தந்தை எனக்குக் கற்றுத் தந்தார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரமங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மக்களுடன் இணைந்து ஓர் அரசியல் இயக்கத்தை வழிநடத்துவதைத் தான் பெருமையாகக் கருதுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.