குழந்தையின் சம்மதமின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொடுதலும் தவறான தொடுதலாக அமையலாம் – டாக்டர் துஷாரா விக்கிரமநாயக்க



குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, குழந்தைகளின் சம்மதத்திற்கு (Consent) அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் டாக்டர் துஷாரா விக்கிரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

பொதுவாக குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் “நல்ல தொடுதல் – தவறான தொடுதல்” (Good Touch, Bad Touch) என்ற கருத்துடன், தங்களை ஒருவர் தொடுவதற்கு தாங்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் குழந்தைகளின் உரிமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மற்றும் குழந்தைகள் இடம்பெற்ற இரண்டு புகைப்படங்களுடன் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்ட அவர், குழந்தையின் சம்மதமின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல் ரீதியான தொடுதலும் பொருத்தமற்றதாக அமையக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒரு புகைப்படத்தில் காணப்படும் சம்பவத்தை அவர் விமர்சித்ததுடன், அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இலங்கையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பரந்த பிரச்சினைகளை அது வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது புகைப்படம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், Stop Child Cruelty Trust அமைப்பினால் சுமார் 40,000 கையொப்பங்களுடன் கூடிய மனுவொன்று பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறுவனின் தோள்களில் தனது கைகளை வைப்பதற்கு முன்னர்,

“உன் தோளில் நான் கைகளை வைக்கலாமா?”

என அந்தச் சிறுவனிடம் அனுமதி கேட்டதாக டாக்டர் துஷாரா விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அவர் கேள்வி எழுப்பியதைக் கேட்டு தாம் ஆச்சரியமடைந்ததாக தெரிவித்த அவர், குழந்தையின் சம்மதத்தை மதிப்பதற்கான ஒரு உதாரணமாக இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

“நல்ல தொடுதல்”, “தவறான தொடுதல்” என உடல் ரீதியான தொடர்புகளை வகைப்படுத்துவதற்கு அப்பால், குழந்தையின் சம்மதம் மதிக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய செய்தி என அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தமது சம்மதத்தை வழங்கவோ அல்லது மறுக்கவோ உரிமை வழங்குவது அவர்களை வலுப்படுத்துவதுடன், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொடுதலும் “தவறான தொடுதலாக” மாறக்கூடும் என்பதுடன், அது குழந்தையின் உரிமை மீறலாகவும் அமையக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் டாக்டர் துஷாரா விக்கிரமநாயக்க விமர்சித்துள்ளார். குழந்தைகளின் உரிமைகள் மற்றும் “வேண்டாம்” என்று கூறுவதற்கான அவர்களின் உரிமை குறித்த சரியான புரிதல் இல்லாமல் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்தளவுக்குப் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் உட்பட பெரியவர்கள் குழந்தைகளின் தனிப்பட்ட எல்லைகளை மதிப்பது தொடர்பில் அதிக விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.