.jpg)
2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் மிகவும் துணிச்சலான ஒரு தீர்மானத்தை எடுத்தனர். நீண்டகாலமாக மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அரசியல் முகாம்களை முழுமையாகத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிடம் நாட்டை ஒப்படைக்க அவர்கள் தீர்மானித்தனர். அது மிகவும் முக்கியமான ஒரு தீர்மானமாகும்.
அதோடு அது முடிவடையவில்லை. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும், அதிகூடிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அதிகூடிய வாக்குகளையும் கொண்ட வலுவான அரசாங்கத்தை மக்கள் எமக்கு அமைத்துக் கொடுத்தனர்.
இந்த அரசாங்கத்தை நாம் எவ்வாறு உருவாக்கினோம்? கடந்த காலங்களில் பணத்தை வாரி இறைத்து அரசாங்கங்களை அமைத்ததைப் போன்று செயற்படுவதற்கான பணபலம் எங்களிடம் இருக்கவில்லை. பொய்யான பிரசாரங்களைப் பரப்புவதற்கு ஊடகங்களைப் பயன்படுத்தும் ஊடக பலமும் எங்களிடம் இருக்கவில்லை. தேர்தல்களை முறைகேடாகக் கையாள்வதற்கான அரச அதிகாரமும் எங்களிடம் இருக்கவில்லை.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாகப் பணபலம், ஊடகபலம் அல்லது அரசியல் அதிகாரம் எதுவும் இன்றி சாதாரண மக்கள் முன்னோக்கி வந்து, தமது மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மக்கள் மைய அரசாங்கத்தை உருவாக்கினர்.
இந்த அரசாங்கத்தைத் தெரிவுசெய்தது மக்களே. இந்த அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப்போவதும் மக்களே. இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கப்போவதும் மக்களே.
மக்கள் ஏன் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்தனர்? நீண்டகாலமாக நாட்டை ஆட்சி செய்த குழுக்கள் இந்த நாட்டில் ஏற்படுத்தக்கூடிய அனைத்து வகையான அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தனர். புனிதமானது எனக் கருதக்கூடிய எதுவுமே எஞ்சாத அளவிற்கு அவர்கள் முழு முறைமையையும் அழித்திருந்தனர்.
இறுதியில் மக்கள் வீதிகளில் இறங்கிக் குரல் எழுப்பத் தொடங்கினர். அதன் காரணமாக ஆட்சியாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்த இவ்வாறான வரலாறு இதற்கு முன்னர் இலங்கையில் இருந்ததில்லை.
எனவே, தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம் இந்த முழுமையான அழிவு மாற்றப்பட்டு, நாடு சரியானதும் சிறந்ததுமான பாதையில் வழிநடத்தப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
அவர்கள் தனிப்பட்ட நன்மைகளை எதிர்பார்த்து எம்மிடம் வரவில்லை. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் சிறந்ததொரு நாட்டையும் எமது பிள்ளைகளுக்குச் சிறந்ததொரு எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
இந்த நாடு முழுமையாக ஒரு ‘கறுப்பு அரசாக’ மாற்றப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் கறுப்புக் கறைகள் படிந்திருந்தன. அரசியல் கறுப்பு அரசியலாகவும் பொருளாதாரம் கறுப்புப் பொருளாதாரமாகவும் மாறியிருந்தது. சட்டமும் நிறைவேற்று அதிகாரமும் கட்டுப்பாடின்றிச் செயற்படும் கறுப்புச் சட்டமாக மாற்றப்பட்டிருந்தன.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்திய இனவாதக் கறுப்பு முழக்கங்கள் எங்கும் பரவியிருந்தன. உலகத்தின் முன்னிலையில் எமது நாடு வங்குரோத்து அடைந்த, ஊழல் நிறைந்த கறுப்பு நாடாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
சிறுவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத, மக்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை இழந்த, சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத ஒரு பிரமாண்டமான கறுப்பு அரசு நாட்டில் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தக் கறுப்பு அரசை முழுமையாகத் தூய்மைப்படுத்தி, எதிர்காலத் தலைமுறைக்குச் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே மக்கள் இந்த நாட்டை எங்களிடம் ஒப்படைத்தனர்.
நாங்கள் உங்களுக்கு ஓர் உறுதிமொழியை வழங்குகிறோம். தேசிய மக்கள் சக்தி இந்தக் கறுப்பு அரசை அதன் அடித்தளத்திலிருந்தே வேரோடு பிடுங்கி அகற்றும்.
நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கறுப்பு அரசு அசையத் தொடங்கியபோது, அதன் பாதுகாப்பையும் சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றிருந்தவர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். பழைய கறுப்பு அரசின் பாதுகாப்பையும் சலுகைகளையும் அனுபவித்த குழுக்களே இன்று இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
உங்களுக்கு ஓர் உறுதியை வழங்குகிறேன். யார் கலக்கமடைந்தாலும் அவர்களின் எந்தவொரு குழப்பத்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அசையாது.
எங்களிடம் நிறைவேற்று ஜனாதிபதியின் பாரிய அதிகாரம் உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளிலும் கணிசமான அதிகாரம் உள்ளது.
ஆனால் நிறைவேற்று அதிகாரத்தையோ, பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையோ எமது மிகப்பெரிய பலமாக நாம் கருதவில்லை. நாம் முழுமையாக மக்களையே நம்புகிறோம்.
முன்னைய ஆட்சியாளர்களிடமும் நிறைவேற்று அதிகாரமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இருந்தன. ஒரு சகோதரர் ஜனாதிபதியாகவும் மற்றொரு சகோதரர் பிரதமராகவும் இன்னுமொரு சகோதரர் நிதி அமைச்சராகவும் மற்றொரு சகோதரர் சபாநாயகராகவும் இருந்து, முழுக் குடும்பமும் அதிகாரத்தில் இருந்தது. ஆனால் இறுதியில் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே எமது பலத்தின் இரகசியம் மக்களிடமே உள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் சக்தியை மேலும் வலுப்படுத்துவதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம்.
இந்தக் கறுப்பு அரசின் பொருளாதாரத்திற்குள் இடம்பெற்ற பாரிய ஊழல்களைத் தடுக்கத் தொடங்கினோம். இலங்கையர்கள் மிகவும் சிரமப்பட்டு ஈட்டிய டொலர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்ட கறுப்புப் பொருளாதாரம் ஒன்று காணப்பட்டது.
இந்தக் குற்றங்களுடன் தொடர்புடைய பல வங்கி அதிகாரிகளையும் பல நபர்களையும் தற்போது நாம் கைது செய்துள்ளோம். அவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் சென்ற பணத்தின் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஒரு பில்லியன் டொலர் என்பது எமது நாடு முழு தேயிலை ஏற்றுமதியின் மூலம் பெறும் வருமானத்துக்குச் சமமான தொகையாகும். குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் சுங்கத் திணைக்களமும் தலையிட்டு, கறுப்புப் பொருளாதாரத்தின் ஊடாக டொலர்கள் நாட்டிலிருந்து கடத்தப்படுவதை முழுமையாகத் தடுத்துள்ளன.
முன்னர் வரி வருமானம் மற்றும் காணிக் குத்தகை வருமானம் உள்ளிட்ட திறைசேரியை வந்தடைய வேண்டிய பணம் திறைசேரியை வந்தடையவில்லை. அது திறைசேரிக்கு வருவதற்கு முன்னரே பல்வேறு வழிகளின் ஊடாக அவர்களின் வீடுகளுக்குச் சென்றது. திறைசேரியை வந்தடைந்த பின்னரும் அதன் ஒரு பகுதி அவர்களின் வீடுகளுக்குச் சென்றது. இதன் காரணமாகத் திறைசேரி காலியானது.
திறைசேரிக்கு வர வேண்டிய ஒவ்வொரு சதமும் வேறு வழிகளில் திருப்பிவிடப்படுவதை நாம் தடுத்தோம். அந்தச் சட்டவிரோத வழிகள் அனைத்தையும் மூடி, திறைசேரியைப் பலப்படுத்தினோம்.
இதன் விளைவாக 2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தின் பங்கு 16.7 சதவீதமாகப் பதிவாகியது. இது கடந்த 30 ஆண்டுகளில் பதிவான அதிகூடிய அரச வருமானமாகும்.
அதேபோன்று திறைசேரிக்கு வருகின்ற பணத்தை நாம் மிகவும் கவனமாகக் கையாள்கிறோம். கடந்த காலத்தில் சாத்தியக்கூற்று ஆய்வுகள் எதுவுமின்றி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு, விரும்பிய இடங்களில் துறைமுகங்களும் விமான நிலையங்களும் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டது.
அவற்றை நாம் தடுத்து, பணத்தை மிகவும் கவனமாகச் செலவிட்டதன் காரணமாக வரவு–செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடிந்தது. 1957ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் பதிவான மிகக் குறைந்த வரவு–செலவுத் திட்டப் பற்றாக்குறை 2025ஆம் ஆண்டில் பதிவாகியது.
கறுப்புப் பொருளாதாரம் தூய்மைப்படுத்தப்படும்போது அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கின்றன.
இவ்வாறு நாம் சேகரித்த செல்வத்தை கிராமங்களுக்கும் மக்களுக்கும் கொண்டு செல்கிறோம். களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பெருந்தொகையான பணத்தை ஒதுக்கியுள்ளோம்.
அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுகளுக்காக இரண்டு டிரில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளோம். இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மூலதன அபிவிருத்திக்காக இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கியதில்லை.
மேலும், மாவட்ட மட்டத்தில் எழும் அவசரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு பில்லியன் ரூபா வரவு–செலவுத் திட்ட ஒதுக்கீட்டை நேரடியாக வழங்கவுள்ளோம். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் மாவட்டச் செயலாளர்கள் அதனைச் செலவிட முடியும்.
நாம் ஆட்சிக்கு வந்தபோது பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் 5,000 ரூபாவாக இருந்தது. இன்று அதனை இரட்டிப்பாக்கி 10,000 ரூபாவாக உயர்த்தியுள்ளோம்.
விவசாயிகளுக்கான உர மானியம் 15,000 ரூபாவாக இருந்தது. அதனை தற்போது 30,000 ரூபாவாக உயர்த்தியுள்ளோம்.
நாம் ஆட்சிக்கு வந்தபோது மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு 5,000 ரூபாவாக இருந்தது. இன்று அது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான கொடுப்பனவையும் அதிகரித்துள்ளோம்.
முன்னர் சிறுவர் இல்லங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்கு எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. தற்போது அந்தப் பிள்ளைகளின் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாவை வைப்புச் செய்கிறோம். அவர்கள் 18 வயதை அடைந்து சிறுவர் இல்லத்தைவிட்டு வெளியேறும்போது வீடொன்றை அமைத்துக்கொள்வதற்காக இரண்டு மில்லியன் ரூபாவை வழங்குகிறோம்.
கல்வி உபகரணங்களை வாங்குவதற்காக 17 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாவை வழங்கினோம். இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த காலத்தில் நாம் பல பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டோம். இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார அழிவை ஏற்படுத்திய பேரிடராக ‘டிட்வா’ சூறாவளி அமைந்தது. சுனாமியைவிட அதிகமான பொருளாதார அழிவை இந்தப் பேரிடர் ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் உட்கட்டமைப்பை மீளமைக்கவும் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நிதி ஒதுக்கினோம்.
வீடுகளை மீளக் கட்டுவதற்காக தலா ஐந்து மில்லியன் ரூபாவை வழங்குகிறோம். மாடு ஒன்று உயிரிழந்திருந்தால் 50,000 ரூபா வழங்கினோம். பன்றி அல்லது ஆடு ஒன்றை இழந்தவர்களுக்கு தலா 30,000 ரூபாவும், இறைச்சிக் கோழி ஒன்றுக்கு 200 ரூபாவும் முட்டையிடும் கோழி ஒன்றுக்கு 400 ரூபாவும் இழப்பீடாக வழங்கப்பட்டது.
முன்னர் ஒரு ஹெக்டேயர் நெற்காணிக்கு 40,000 ரூபா வழங்கப்பட்டது. நாம் 150,000 ரூபாவை வழங்கினோம். எமது திறைசேரி பலமாக இருந்ததாலேயே இந்தப் பேரிடரை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது.
அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் ஆரம்பமானது. எரிபொருள் கிடைக்காது, மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற பிரசாரங்களால் மக்கள் அச்சமடைந்து வரிசைகளில் நிற்கத் தொடங்கினர். ஆனால் எரிபொருள் வரிசைகள் உருவாக நாம் இடமளிக்கவில்லை. மின்சாரத்தையும் துண்டிக்கவில்லை.
மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்ட உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் மின்சார உற்பத்திச் செலவு அதிகரிப்பை மக்களால் தாங்க முடியாது என்பதால், எரிபொருள் மற்றும் மின்சார மானியங்களுக்காக 100 பில்லியன் ரூபாவை ஒதுக்கினோம்.
ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் ஏற்பட்ட செலவில் 100 ரூபாவை அரசாங்கம் பொறுப்பேற்று, எரிபொருள் மானியத்திற்காக 60 பில்லியன் ரூபாவை வழங்கியது.
அதேபோன்று 180 அலகுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 95 சதவீதமான சாதாரண நுகர்வோரின் மின்சாரக் கட்டண அதிகரிப்பை அரசாங்கம் பொறுப்பேற்று, இலங்கை மின்சார சபைக்கு 15 பில்லியன் ரூபாவை வழங்கியது.
நாட்டில் காணப்பட்ட மிகவும் அருவருப்பான கறுப்பு அரசியலை நாம் மாற்றினோம். மக்கள் அரசியல்வாதிகளைக் கண்டு அஞ்சியதும், அரசியல்வாதிகள் பொதுப் பணத்தை வீணடித்ததுமான கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம்.
ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தினோம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள், வாகனங்கள், பாதுகாப்பு மற்றும் செயலாளர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளையும் நீக்கினோம்.
இன்று அரசியல்வாதி ஒருவரைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அரசியல்வாதி ஒருவரின் தலைக்கு மேலாகக் காகம் ஒன்றுகூட பறக்க முடியாது என்று கூறப்பட்ட அரசியல் கலாசாரத்தை மாற்றியுள்ளோம்.
அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும் போராட்டம் நடத்துவதற்குமான மக்களின் ஜனநாயக உரிமையை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, மக்கள் போராட்டங்களுக்கு எதிராக ஒரு கண்ணீர்ப்புகைத் தாக்குதல்கூட மேற்கொள்ளப்படாத, தடியடிப் பிரயோகம் இடம்பெறாத, நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்படாத அமைதியான காலப்பகுதியை உருவாக்க முடிந்துள்ளது.
பொலிஸ் களஞ்சியங்களில் இருந்த கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் காலாவதித் திகதிகூட முடிந்துவிட்டதாகப் பொலிஸார் என்னிடம் தெரிவித்தனர். இதுவே உண்மையான ஜனநாயகமாகும்.
கறுப்பு அரசியலை அகற்றி, மக்களுக்கு உண்மையாகப் பொறுப்புக்கூறும் அரசியல் முறைமையை நிறுவியுள்ளோம்.
சட்டத்தை முழுமையாகச் சீரழித்திருந்த திருடன்–பொலிஸ் விளையாட்டை நாம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம்.
முன்னர் ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் எதிர்த்தரப்பினரைத் திருடர்கள் என்று அழைக்கும். பின்னர் அந்தத் தரப்பினர் எதிர்க்கட்சிக்குச் சென்றதும் பொலிஸாராக மாறிவிடுவார்கள். இந்தத் திருடன்–பொலிஸ் விளையாட்டின் காரணமாக அவர்கள் திருடுவதற்கோ ஊழலில் ஈடுபடுவதற்கோ அஞ்சவில்லை.
ஆனால் தூய்மையான மற்றொரு குழு வந்து சட்டத்தை உண்மையாக நடைமுறைப்படுத்தும் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. இன்று அந்த விளையாட்டு முடிவடைந்து சட்டம் உண்மையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கடந்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவான பெருமளவான வழக்குகள் எம்மிடம் உள்ளன. அவை காலவரையறைச் சட்டத்தின் கீழ் செல்லுபடியற்றுப் போவதற்கு முன்னர் விரைவாகத் தீர்ப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பலப்படுத்தி வருகிறோம்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தேவையான வசதிகளையும் விசேட கொடுப்பனவையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
முன்னர் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் மாதமொன்றுக்கு சுமார் 3,000 அறிக்கைகளை மாத்திரமே வெளியிட்டது. அதற்குத் தேவையான வசதிகளையும் கொடுப்பனவுகளையும் வழங்கிய பின்னர், கடந்த மாதம் 9,084 அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க முடிந்துள்ளது.
கொழும்பில் மாத்திரம் ஏழு புதிய மேல் நீதிமன்றங்களை நிறுவியுள்ளோம். சம்பவம் நடைபெற்று நீண்டகாலத்திற்குப் பின்னர் ஒருவரைத் தண்டிப்பதில் பயனில்லை. அந்தச் சம்பவம் மக்களின் நினைவில் இருக்கும்போதே தண்டனை வழங்கப்பட வேண்டும்.
தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை எவ்வித அச்சமும் இன்றி கொண்டு வருவோம். மக்களுக்காக முறையாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட எந்தவொரு தீர்மானத்திலிருந்தும் நாம் பின்வாங்க மாட்டோம்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான தீர்ப்பு கிடைத்தவுடன் அதனை உடனடியாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றி, ஊழல்வாதிகளைத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.
முன்னர் உலகத்தின் முன்னிலையில் எமது நாடு ஒரு கறுப்பு நாடாகவே காணப்பட்டது. ஊழல் சுட்டெண்ணில் மேல்நோக்கிச் செல்லும், அமைதி தொடர்பான தரவரிசையில் கீழ்நோக்கிச் செல்லும், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நாடாகவே சர்வதேச அமைப்புகள் இலங்கை தொடர்பில் கலந்துரையாடின.
வேறு நாடுகளின் பாராளுமன்றங்களில் என்ன செய்யக்கூடாது என்பதற்கான உதாரணமாக இலங்கை குறிப்பிடப்பட்டது. ஒரு நாட்டின் பிரதமர், இலங்கைக்கு ஏற்பட்ட நிலைமை தனது நாட்டிற்கு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று தெரிவித்தார். மற்றொரு நாடு, கடன் வாங்கி அழிவடைந்த இலங்கையைப் பாருங்கள் என்று கூறியது.
இன்று அந்த நிலைமை முழுமையாக மாறியுள்ளது. பொருளாதார மற்றும் சமூகக் குறிகாட்டிகள் அனைத்திலும் இலங்கை சர்வதேச மட்டத்தில் விரைவாக முன்னேறி வருகிறது. அண்மைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மிகவும் வேகமாக மீண்டெழுந்த முன்னணி நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச விவகாரங்களிலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் வகையில் நேரடியானதும் உறுதியானதுமான தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
அன்றைய கறுப்பு அரசியலின் பிரதான கருவியாக இனவாதம் பயன்படுத்தப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இரு தரப்பிலுமுள்ள இனவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கி, சிங்கள–முஸ்லிம் மோதல்களை உருவாக்கி, மக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளினர். இதனால் எமது நாடு உலகத்தின் முன்னிலையில் அவமானத்திற்கு உள்ளானது.
தேசிய மக்கள் சக்தியின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் இனவாத மோதல் தொடர்பாக ஒரு பொலிஸ் முறைப்பாடுகூட பதிவாகவில்லை. இனவாதக் கறுப்பு அரசியலை முழுமையாகத் தோற்கடித்து தேசிய ஒற்றுமையை நிறுவியுள்ளோம்.
இந்தக் கறுப்பு அரசின் மிகவும் ஆபத்தான அம்சமாகப் போதைப்பொருட்களும் பாதாள உலகமும் காணப்பட்டன. சில பிரதேச சபைகளின் தவிசாளர் பதவிகள்கூட பாதாள உலகத்தினரால் தீர்மானிக்கப்படும் அளவிற்கு அது வளர்ந்திருந்தது. உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டு, குறிப்பிட்ட நபர்களைத் தவிசாளர் ஆசனத்தில் அமரச் செய்யும் நிலை காணப்பட்டது.
அவர்கள் சேகரித்த பெருமளவான கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி பொலிஸ், சுங்கம், கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்த பலவீனமான அதிகாரிகளை விலைக்கு வாங்கினர். அந்தக் கறுப்புப் பணம் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசாரங்களுக்குள் செலுத்தப்பட்டது.
இதன் விளைவாக அரச இயந்திரத்தின் கணிசமான பகுதியைக் கட்டுப்படுத்தும் நிலையைப் பாதாள உலகம் பெற்றிருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கிலோகிராம் ஹெரோயின், 308 கிலோகிராம் கொக்கெய்ன், 1,820 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 16 மில்லியன் போதை மாத்திரைகளை நாம் கைப்பற்றியுள்ளோம்.
22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இந்தச் சிறிய நாட்டில் 16 மில்லியன் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டமை மாத்திரமே நாடு எவ்வளவு பேரழிவான நிலைக்குள் இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற 74 முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவந்துள்ளோம். எதிர்காலத்தில் மேலும் பலரை நாட்டுக்குக் கொண்டுவருவோம்.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்குச் சொந்தமான ஆறு பில்லியன் ரூபா பெறுமதியான பேருந்துகள், தோட்டங்கள், காணிகள் மற்றும் கட்டிடங்களையும் அரசுடைமையாக்கியுள்ளோம்.
எமது நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்காக இந்தப் போதைப்பொருள் அச்சுறுத்தலையும் பாதாள உலகத்தையும் நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்போம்.
போதைப்பொருட்களையும் அதனுடன் தொடர்புடைய பாதாள உலகத்தையும் நேரடியாக எதிர்கொள்ளும் ஒரேயொரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே ஆகும்.
இதற்காகப் பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஆதரவுடன் விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாளாந்தச் சுற்றிவளைப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஊடாக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கறுப்பு அரசை வைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முதலாவது படி இந்தக் கறுப்பு அரசை அழிப்பதாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர்.
அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதுடன் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கான பெருமளவான முக்கிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
அடுத்த ஆண்டு மூன்று பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். கலகெதர முதல் ரம்புக்கனை வரையிலான வீதி, இங்கிரிய முதல் பாதுக்கை வரையிலான வீதி மற்றும் குருநாகல் முதல் கலேவெல வரையிலான வீதி ஆகியவையே அவையாகும்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக் கடனாக ஒரு சதத்தைக்கூட பெறாமல், திறைசேரியின் நிதியை மாத்திரம் பயன்படுத்தி இந்த மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளும் அமைக்கப்படவுள்ளன.
எமது ரயில் போக்குவரத்து முறைமையை மின்மயமாக்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். அதன் மொத்தச் செலவு 60 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகப் பாணந்துறை முதல் மருதானை, நீர்கொழும்பு முதல் மருதானை மற்றும் ராகம முதல் மருதானை வரையிலான ரயில் பாதைகளை மின்மயமாக்குவதற்கான கேள்விப்பத்திரங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்குத் தேவையான 100 பில்லியன் ரூபா முழுவதும் அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் வழங்கப்படும்.
47 பில்லியன் ரூபா செலவில் பாரிய மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். இதற்குத் தேவையான அனைத்து நிதியையும் அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் ஒதுக்கத் தீர்மானித்துள்ளோம்.
நாடு முழுவதிலும் 4G சமிக்ஞை வசதியைப் பூர்த்திசெய்வதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 புதிய 4G கோபுரங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அவற்றில் 250 கோபுரங்களின் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவுசெய்யப்படும்.
டிஜிட்டல் மயமாக்கலுக்காக அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளோம்.
இதன் விளைவாக சுமார் 80 சதவீதமான அரச சேவைகளை மக்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், காணி உறுதிகள் மற்றும் வருமான அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளையும் வீட்டிலிருந்தே டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள முடியும்.
பாரம்பரிய பல்கலைக்கழக முறைமைக்கு மேலதிகமாக நாடு முழுவதும் 50 புதிய தொழிற்கல்விப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு தொழிற்கல்விப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
இதன் மூலம் உயர்தரப் பரீட்சையை நிறைவுசெய்யும் எமது பிள்ளைகள் பாரம்பரிய பல்கலைக்கழகங்களிலோ தொழிற்கல்விப் பல்கலைக்கழகங்களிலோ கல்வி கற்று தமது எதிர்காலத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடியும்.
சூரிய சக்தியின் மூலம் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், நாட்டில் அதிகூடிய மின்சாரத் தேவை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான உச்சநேரத்திலேயே ஏற்படுகிறது.
அந்த நேரத்தில் சூரிய ஒளி இல்லாததால் டீசலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாகப் பகலில் சூரிய சக்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விநியோகிப்பதற்காக 160 மெகாவோட் திறனுடைய பாரிய மின்கலச் சேமிப்பு அமைப்பை நிறுவியுள்ளோம்.
டீசல் பயன்பாட்டை மேலும் குறைப்பதற்காக இன்னுமொரு 200 மெகாவோட் மின்கலச் சேமிப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் காணப்பட்ட நாட்டிற்குப் பாதகமான ஒப்பந்தங்களையும் மீளாய்வு செய்து வருகிறோம். நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் எரிபொருளை வழங்கக்கூடிய போட்டித்தன்மையான சந்தையை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 25 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தோம். எனினும், மத்திய கிழக்கு மோதல் காரணமாக நாட்டுக்குப் பொருத்தமான பிடுமனை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
வீதிப் பணிகளை விரைவாக நிறைவுசெய்வதற்காக, தேவையான பிடுமனை உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் தேவையான விலையில் இறக்குமதி செய்வதற்குப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விசேட அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக அனுமதி வழங்கினோம்.
எல் நினோ காலநிலை நிலைமையின் காரணமாக செப்டம்பர் மாத இறுதிவரை வறட்சியும், ஒக்டோபர் முதல் ஜனவரி வரை கடுமையான மழையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காய்ந்துள்ள சிறிய நீர்த்தேக்கங்களைப் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை வழங்கியுள்ளோம். இதன் மூலம் எதிர்வரும் மழைக்காலத்தில் கிடைக்கும் அதிகபட்ச நீரைச் சேமிக்க முடியும். எதிர்கால வறட்சிக் காலங்களில் விவசாயிகள் தடையின்றிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடவும் இது உதவும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலக்கின்றிச் செயற்படும் அரசாங்கமல்ல. ஒவ்வொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் முழுமையான சாத்தியக்கூற்று ஆய்வை மேற்கொள்கிறோம். மக்களுக்குப் பயன் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே நிதி ஒதுக்குகிறோம்.
இந்த நோக்கத்திற்காக வரவு–செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் மற்றும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாடு பயணித்த பாரம்பரியப் பாதையை நாம் தீர்க்கமாக மாற்றியுள்ளோம். இந்தப் புதிய மாற்றத்தையே மக்கள் எம்மிடம் எதிர்பார்த்தனர்.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்காக நாம் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தப்போவதாக சிலர் கூறுகின்றனர். அரசியல் அறிவில்லாத, அச்சமடைந்தவர்கள் மக்களைப் பயமுறுத்துவதற்காக முன்வைக்கும் கருத்துகளே இவையாகும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்களை நாம் ஒத்திவைக்க மாட்டோம். ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் உரிய காலத்தில் நடத்துவோம்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது சில சட்டரீதியான தடைகள் காணப்படுகின்றன. பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணக்கம் காணும் தேர்தல் முறைமை தீர்மானிக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவோம்.
மக்களை ஏமாற்றி அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள நாம் ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம். நாம் எப்போதும் மக்களையே முழுமையாக நம்புவோம்.
எனவே நாம் மீண்டும் ஒன்றிணைவோம். அடிமட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வலுவான அரசியல் இயக்கத்தை மேலும் பலப்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்பும் இந்த வரலாற்றுப் பயணத்திற்கு நீங்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவுசெய்கிறேன்.
மிக்க நன்றி!
அனைவருக்கும் வெற்றி!




.jpg)





.jpg)

