துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது


துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த  ரஞ்சித் குமார என்ற "கொண்ட ரஞ்சி" என்றழைக்கப்படும் இன்று (09) புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் காலை விமானம் மூலம் நாட்டை வந்தடைந்த அவரை, தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்று கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி துபாயிலிருந்து இத்தாலிக்குத் தப்பியோட முயன்ற போது, துபாய் பாதுகாப்பு அதிகாரிகளால் கொண்ட ரஞ்சி கைது செய்யப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலையில் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக இவர் பல பிரிவுகளால் தேடப்பட்டு வந்த நபராவார்.

துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பல முக்கிய பாதாள உலகக் தலைவர்களில் கொண்ட ரஞ்சியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இவரிடம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.