“எல்லை நிர்ணயம் இல்லாமலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்” – சமன் ஸ்ரீ ரத்நாயக்க


மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும், எல்லை நிர்ணயப் பணிகளுக்கும் எந்தவித நேரடிச் சம்பந்தமும் இல்லை. 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்த போது இந்த விதியை ஏன் உள்ளே சேர்த்தார்கள் என்று புரியவில்லை. உண்மையிலேயே எல்லை நிர்ணய ஆணைக்குழு எந்தவித அதிகாரமுமற்ற ஒரு குழு மட்டுமே என அதன் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய எழுதிய 'தி யுவத்வேக்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்படக் கட்சி வேறுபாடின்றி நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சடங்கு ரீதியான நிகழ்வுகளுக்கு மத்தியில், விழா அரங்கின் ஒரு பகுதியில் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சுவாரஸ்யமான மற்றும் காரசாரமான அரசியல் உரையாடல்கள் அரங்கேறின. இதன் போதே சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமும் தற்போதைய எல்லை நிர்ணயக் குழுவின் தலைவருமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இதன் போது சம்பாஷணை இடம்பெற்றது.

அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, எல்லை நிர்ணயப் பணிகளை விரைவாக முடித்துத் தந்தால் மட்டுமே மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த முடியும் எனக் கூறி, அப்பணிகளை விரைவுபடுத்துமாறு சமன் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க, 'மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்த எல்லை நிர்ணயப் பணிகளுக்கும் எந்தவித நேரடிச் சம்பந்தமும் இல்லை.

17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்த போது இந்த விதியை ஏன் உள்ளே சேர்த்தார்கள் என்று புரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், இது எந்தவித அதிகாரமுமற்ற ஒரு குழு மட்டுமே எனத் தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட அரசாங்க தகவல் தினைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக, எல்லை நிர்ணயக் குழுவின் தாமதம் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதாகப் பெரும்பாலான பொதுமக்கள் தவறாகக் கருதுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.