வீதியோரங்களில் சட்டவிரோத மீன் விற்பனை – சம்மாந்துறையில் 11 வியாபாரிகளுக்கு ரூ.1.10 இலட்சம் அபராதம்



சம்மாந்துறை பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதகமான வகையில் வீதியோரங்களில் சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபட்ட 11 வியாபாரிகளுக்குத் தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 1,10,000 ரூபாய் அபராதம் விதித்துச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 17ஆம் திகதி வீதியோரங்களில் மீன் விற்பனையில் ஈடுபட்ட 12 வர்த்தகர்களுக்கு எதிராகச் சுகாதார அதிகாரிகளால் 'பி' அறிக்கை மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்றில் ஆஜராகாத ஒரு வியாபாரிக்கு எதிராகப் பிடிவராந்து பிறப்பித்த நீதவான், அவருக்கான வழக்கினை எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மன்றில் ஆஜரான ஏனைய 11 மீன் வியாபாரிகளும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பயணிக்கும் வீதியோரங்களில் மீன் விற்பனை செய்யக் கூடாது என்றும், உள்ளூராட்சி பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள சந்தைப் பகுதிகளில் மட்டுமே வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நீதவான் கடுமையாக அறிவுறுத்தினார்.

பொதுச் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இச்சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், வீதியோரங்களில் மீண்டும் மீன் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.