அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு – 26 வயது சந்தேகநபர் கைது; கைத்துப்பாக்கியும் மீட்பு



அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (4) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 74 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் அதே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களுக்கு அமைய, இந்தக் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்று கல்வெஹெர பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.