மயிலத்தமடு–மாதவனை பால் பண்ணையாளர்களுக்காக 1,500 ஏக்கருக்கும் அதிகமான மேய்ச்சல் நிலத்தை விடுவிக்குமாறு ஜனாதிபதி கடந்த மே மாதம் மகாவலி அதிகாரசபைக்கு வழங்கிய உத்தரவை அந்த அதிகாரசபை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ள நிலையில், புதிதாக குடியேறியுள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் அந்த நிலத்தில் பயிர்ச்செய்கையை ஆரம்பித்துள்ளதாக, மட்டக்களப்பு சித்தாண்டி சந்தியில் 2026 செப்டெம்பர் 16ஆம் திகதி புதன்கிழமை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
கால்நடைகளை மேய்ப்பதற்காக பயன்படுத்தப்பட் சுமார் 7,000 ஏக்கர் நிலப்பரப்பில் செழிப்பாக புல் வளரும் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பகுதியை சிங்கள விவசாயிகள் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளதாக, பால் பண்ணையாளர்கள் சுமார் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, 2026 மே 20ஆம் திகதி நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மயிலத்தமடு–மாதவனை பால் பண்ணையாளர்களுக்காக 1,570 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கிய உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
2026 செப்டெம்பர் 29 ஆம் திகதி நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மயிலத்தமடு–மாதவனை பால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மீண்டும் கலந்துரையாடப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேய்ச்சல் நிலங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அதற்காக வேறு காணிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பால் மாடுகள் மேயும் பகுதியை மேய்ச்சல் நில வலயமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் “தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” அந்தக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி பிராந்திய ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
“மயிலத்தமடு-மாதவனை பால் பண்ணையாளர்களின் மாடுகளை விவசாயம் மேற்கொள்ளப்படும் பிரதேசத்தில் உள்ள மேய்ச்சல் நிலப் பகுதிக்கு அனுமதிப்பதோடு, அதே பிரதேசத்தில் விவசாயிகள் முரண்பாடுகள் இன்றி விவசாயத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். இதற்குத் தேவையான காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகாவலி அதிகாரசபை மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இணக்கத்துடன், மாடுகள் மேய்க்கப்படும் பிரதேசத்தை மேய்ச்சல் நிலமாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த விடயத்தை சிலர் இனவாத அடிப்படையில் நோக்குவதை அவதானிக்க முடிகிறது. எனவே விவசாயிகளின் பொறுப்புகளையும், உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.”
மயிலத்தமடு–மாதவனை பாரம்பரிய பால் பண்ணையாளர்கள் பல ஆண்டுகளாக தமது மாடுகளை மேய்ப்பதற்காக 7,700 ஏக்கருக்கும் அதிகமான மேய்ச்சல் நிலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலப்பரப்பில் சுமார் 4,000 ஏக்கர் நிலத்திற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் வனப் பாதுகாப்புத் திணைக்களமும் உரிமை கோருகின்றன. எஞ்சியுள்ள 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை மேய்ச்சல் நிலமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் மிக விரைவாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பது பால் பண்ணையாளர்கள் கோரிக்கையாகும்.
பால் பண்ணையாளர்கள் விரைவான தீர்வைக் கோரும் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்வதால், தமது பால் மாடுகளுக்கு உணவின்றி அவை உயிரிழக்கும் நிலை ஏற்படக்கூடும் என அமைச்சர் ஹந்துநெத்தியின் கருத்துக்கு பதிலளித்த மயிலத்தமடு–மாதவனை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“அமைச்சர் மூன்று மாதங்களுக்குள் நிலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதாக தெரிவிக்கின்றார். தற்போது எங்கள் மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே அங்கு மேய்ச்சலுக்கு கொண்டுச்செல்ல முடியாது. எங்கள் மேய்ச்சல் நிலத்தில் வெளி பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் விவசாயக நடவடிக்கைகளை ஆரமபித்துள்ளனர். இப்போது எங்கள் மாடுகளை எங்கு கொண்டுச் செல்வது. விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு இரண்டு, மூன்று கிலோமீற்றர்களுக்கு அப்பால் காணி வழங்கப்படும் என எம்.பி பிரபு தெரிவிக்கின்றார். அது உண்மையில் சாத்தியமா? அது எப்போது நடைபெறும்? எங்களுக்கு மேய்ச்சல் நிலம் கிடைக்கப் போவதில்லை. புல் இல்லாமல் மாடுகள் இறக்கும். அதன் பின்னர் பால் பண்ணையாளர்களும் இறக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.” என ன சீனிதம்பி நிமலன் தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்னால் தமிழ் பால் பண்ணையாளர்கள் முதன்முறையாக போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
2023 செப்டெம்பர் 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில், பால் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க தங்களால் முடியாது என மாவட்ட செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்திருந்ததற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பால் பண்ணையாளர்களின் நிலங்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்த மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தவறியுள்ளதாக, ஆயிரம் நாட்களுக்கும் மேலாக பால் பண்ணையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மயிலத்தமடு–மாதவனை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன், 2026 செப்டெம்பர் 16ஆம் திகதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதியின் உத்தரவை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை நடைமுறைப்படுத்தாததால், சிங்களப் பகுதிகளில் இருந்து வந்த 200க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் தற்போது மேய்ச்சல் நிலங்களைத் துப்புரவு செய்து, விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அன்றைய தினம் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு, மயிலத்தமடு–மாதவனை பகுதியில் அமைந்துள்ள மேய்ச்சல் நிலத்தை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த வியத் மக செயற்பாட்டாளரான அனுராதா யஹம்பத், அக்காலப்பகுதியில் குடியேற்றிய சுமார் 150 சிங்களக் குடும்பங்களுக்கு சோளம் உள்ளிட்ட பயிர்களைச் செய்வதற்காக வழங்கியதைத் தொடர்ந்து, பாரம்பரியமாக பால் மாடுகளை வளர்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகின.
நீண்டகாலமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக சில சிங்கள விவசாயிகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறியிருந்த போதிலும், பால் மாடுகளுக்கு மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மீண்டும் வழமைபோன்று சிங்கள விவசாயிகளின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மயிலத்தமடு–மாதவனை பால் பண்ணையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.





.jpg)







