அஹுங்கலையில் வீட்டு ஜன்னல் வழியாக துப்பாக்கிச் சூடு – 74 வயது நபர் காயம்



அஹுங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.

கல்வெஹெர, அஹுங்கல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் இருந்த வீட்டின் ஜன்னல் வழியாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி (Pistol) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.