பெலவத்தையில் காயமடைந்த முள்ளம்பன்றியை தாக்கிய நபர் – அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரல்



பெலவத்தையில் காயமடைந்த முள்ளம்பன்றியை தாக்கியதாகக் கூறப்படும் நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் கோரியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (03) அப்பகுதியிலுள்ள வீடொன்றுக்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியிலுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்த சிலர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அருகிலிருந்த வீட்டின் சிசிரிவி காட்சிகளின்படி, முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கும் நபர் ஒருவர், காயமடைந்த நிலையில் காணப்பட்ட முள்ளம்பன்றி ஒன்றை வீதி ஓரத்திலுள்ள வடிகானில் வீசுவது பதிவாகியுள்ளது.

அதன்பின்னர், அந்நபர் அந்த விலங்கை மீண்டும் வீதிக்கு இழுத்து வந்து, தடியால் தாக்கி, பின்னர் அங்கிருந்து இழுத்துச் செல்வது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், காணொளியில் காணப்படும் நபரை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காணொளியில் உள்ள நபரை அடையாளம் காண்பவர்கள் அல்லது இந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தவர்கள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் சட்ட பிரிவின் 011 2888585 என்ற இலக்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.