நாட்டின் பல பகுதிகளுக்கு இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் நிற எச்சரிக்கை



நாட்டின் பல பகுதிகளுக்கு இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் நிற எச்சரிகையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை பிரிவு விடுத்துள்ளது.

இன்று (01) வியாழக்கிழமை காலை 10.00 விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது இரவு 11.00 மணி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய கடும்மழையுடன் கடும் மின்னல் தாக்கங்களும், தற்காலிகமாகப் பலத்த சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிமின்னல் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பைப் பெற இயற்கை இடர் கட்டுப்பாட்டு மையம் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரியுள்ளது:

பாதுகாப்பான இடங்களை நாடுங்கள்: திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் கீழோ நிற்பதைத் தவிர்த்து, உடனடியாகப் பலமான கட்டிடங்களுக்குள் செல்லவும்.

திறந்தவெளிகளைத் தவிர்க்கவும்: நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குளங்கள்/ஆறுகள் போன்ற திறந்த நீர்நிலைகளுக்கு அருகில் நிற்பதை முற்றிலும் தவிர்க்கவும்.

மின்சாரச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்: வயர் இணைப்பு கொண்ட தொலைபேசிகள் மற்றும் பிரதான மின்சார விநியோகத்தில் உள்ள மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

திறந்த வாகனங்களைத் தவிர்க்கவும்: மிதிவண்டி, டிராக்டர் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனப் பயணங்களைத் தவிர்க்கவும்.

விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருப்பதுடன், அவசர உதவி தேவைப்படின் உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.