இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமூகத்தின் உண்மையான அடித்தளமாக இருந்துவரும் சிரேஷ்ட சமூகத்தினரின் அறிவு, அனுபவம், வழிகாட்டல் ஆகியன தேசத்தின் எதிர்காலப் பாதையை ஒளிமயமாக்கும் மிகவும் முக்கியமான வளங்களாகும்.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்பதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது வெறும் பௌதிக, பொருளாதார அபிவிருத்தியை மாத்திரமல்ல.
ஒரு நற்சமூகத்தின் உண்மையான நாகரிகமானது, அச்சமூகத்தில் சிரேஷ்ட சமூகத்தினருக்குக் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு, கௌரவம், நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது.
எனவே, முதியோர் சமூகத்துக்கான அரசாங்கத்தின் பொறுப்பை வெறும் நிவாரணக் கட்டமைப்புக்குள் மாத்திரம் வரையறுக்காது, அவர்களின் மனித உரிமைகள், சுதந்திரம், சமூகக் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் முழுமையான தேசியப் பொறுப்பாக நிறைவேற்ற நமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
முதியோர் சமூகத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மாதாந்த முதியோர் கொடுப்பனவை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும், வைப்புகளுக்கான மேலதிக வட்டி நிலுவைத் தொகையை வழங்கி முடிப்பதற்கும் நமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது அந்த நோக்கத்துடனேயே ஆகும்.
மும்மொழிகளிலும் வெளியிடப்பட்ட புதிய தேசிய முதியோர் கொள்கையினூடாகவும், முதியோர் உரிமைகளைப் பாதுகாத்தல் சட்டத்தைத் தற்போதைய தேவைகளுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதனூடாகவும், சிரேஷ்ட பிரஜைகளின் பராமரிப்பை அரசின் முதன்மைப் பணிகளில் ஒன்றாக நமது அரசாங்கம் மாற்றியமைத்திருக்கின்றது.
பாரம்பரியக் கட்டமைப்புக்கு அப்பால் சென்று, கதிர்காமத்தில் 'Silver Age Centre' போன்ற சகல வசதிகளையும் கொண்ட பராமரிப்பு மையங்களை ஆரம்பித்தல், வதிவிட முதியோர் இல்லங்களுக்காக உயரிய ஒழுங்குமுறைத் தரங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் நவீன வசதிகளுடன்கூடிய பராமரிப்பு மையங்களை நிறுவுதல் ஆகியவற்றுடன், தொழில்சார் பராமரிப்பாளர் படையணியை உருவாக்குவதற்கான பாரிய திட்டமொன்றும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
'ஆரோக்கியா' மற்றும் 'சுவபஹசு' திட்டங்களின் ஊடாக சுகாதார வசதிகளை வழங்குவதோடு, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் மத்தியில் நமது சிரேஷ்ட பிரஜைகள் தனிமைப்படுத்தப்படாத வகையில், அவர்களின் டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் சைபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களையும் நாம் ஆரம்பித்திருக்கின்றோம். மேலும், கள மட்டத்திலான சேவைகளை மேலும் திறம்பட மேற்கொள்வதற்குரிய அரச நிறுவனங்களை ஒரே கட்டமைப்பின்கீழ் ஒருங்கிணைத்திருப்பதுடன், 60 வயதிற்கு மேற்பட்ட மக்களைச் சுறுசுறுப்பான பொருளாதாரப் பங்காளிகளாக நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்யும் "Silver Economy" கொள்கையையும் நாம் நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கின்றோம்.
நமது முதியோர் சமூகம் என்பது கடந்தகாலப் பொறுப்பினை நிறைவேற்றிய ஒரு தரப்பினர் மாத்திரம் அல்லர், மாறாக, நாம் கட்டியெழுப்பும் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் எதிர்காலக் கனவை நோக்கி வழிகாட்டுபவர்களாகவே அவர்களை நாம் கருதுகின்றோம். உங்களது அனுபவங்களுக்குப் பொருத்தமான உயரிய கௌரவத்தை வழங்கி, பாதுகாப்பான, மகிழ்ச்சியான எதிர்காலத்தை உறுதிப்படுத்த நமது அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அபிமானம்மிக்க சர்வதேச முதியோர் தினத்தில் சிரேஷ்ட பிரஜைகளாகிய உங்கள் அனைவரையும் கௌரவத்துடன் நினைவுகூர்வதோடு, உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் நலன் என்பன கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.





.jpg)







