
நாட்டில் ஏற்படுகின்ற அனர்த்தங்களின்போது முதன்முதலில் மீனவர்களை கடலுக்கு போக வேண்டாம் என அரசாங்கம் அறிவித்தல் வழங்குகின்றபோதும், தொழிலுக்குச் செல்லாத நிலையில் பாதிப்பை எதிர்கொள்ளும் மீனவர்களின் நலன் கருதி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காமை கவலையளிக்கிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் திங்கட்கிழமை (5) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடலுக்குப் போக வேண்டாம், புயல் வருகிறது, மழை பெய்கிறது என்றால் முதல் முதல் மீனவர் சமூகம் தான் கடலுக்கு செல்லாது. அதை எத்தனை நாள் தொடர்ந்து அந்த அனர்த்தங்கள் இருக்கிறதோ, அத்தனை நாளும் அவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கின்ற ஒரு நிலை காணப்படுகின்றபோது, இந்த அரசாங்கம் மீனவர்களுக்கான திட்டத்தை அறிவிக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. ஏனென்றால் பாதிக்கப்படுவது மீனவர் சமூகம்.
தொடர்ச்சியாக நடந்த இயற்கை அனர்த்தங்கள், அடிக்கடி புயல் வரப்போகிறது, கடல் கொந்தளிப்பு, போக வேண்டாம் என்று சொல்வதெல்லாம் உண்மையில் எங்களுடைய மீனவர் சமூகத்திற்கு.
அன்றாடம் கடலுக்கு போய் வாழ்கின்ற, பள்ளிக்கூட செலவுகள் இப்படி எல்லா செலவுகளையும் இந்த தொழிலின் ஊடாக சமாளித்துக்கொண்டிருக்கின்ற மீனவர் சமூகத்திற்கு, இந்த அனர்த்தங்கள் வருகின்றபோது ஏன் கடந்த அரசாங்கங்களாக இருக்கலாம், இந்த அரசாங்கமாக இருக்கலாம், ஏன் கருணை காட்டுகின்ற நிலை இல்லாதிருக்கிறது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ஜனாதிபதி கூட இங்கே வந்து உடனடியாக மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றொரு உத்தரவை சொல்லிப் போன பின்பும், இதுவரை மீனவர்களுக்கு இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புயலால் பாதிக்கப்பட்டு வலைகள் துளைக்கப்பட்டு, கடலிலே வலைகள் காணாமல்போன மீனவர்களுக்கு ஒரு நிவாரணம் வழங்கப்படவில்லை. நான் நினைக்கிறேன், உடைந்த நிலையிலே, கிட்டத்தட்ட 5, 10 படகுகளுக்குத்தான் நஷ்டஈடு வழங்கப்பட்டிருக்கிறது.
தொலைந்த வலைகளுக்கு நஷ்ட ஈடு இன்னும் கொடுக்கப்படவில்லை. இப்படி பல விதங்களிலும் எங்களுடைய மீனவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 8ஆம் மாதம் இங்கே மீனவ உயர் அதிகாரிகள் ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். இப்பொழுது இரண்டு மாதங்கள் தாண்டியிருக்கிறது. அதில் அடுத்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது. இங்கே வந்து மீனவர்களை ஏமாற்றுகின்ற ஒரு நிலைப்பாட்டை செய்கிறார்களா என்ற ஒரு நிலையை நாங்கள் எண்ணக்கூடியதாக இருக்கிறது.
ஏனென்றால், இங்கே பாஸ் கொடுக்கப்பட்ட எங்களுடைய மீனவர்களுக்கு பாஸ் மறுக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு சொல்லுகிறோம், நாளைக்கு சொல்லுகிறோம் என்ற ஒரு விதத்திலே அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அரசும் இந்த இரண்டு மாதங்கள் கழித்து நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைச்சர் அவர்கள் அதில் அக்கறை கொண்டிருக்கிறாரா? என்பது தெரியாமல் இருக்கிறது. ஏனென்றால் அன்றாடம் என்னையும் வந்து சந்திக்கிறார்கள். அங்கே திணைக்களத்திற்கு, அதாவது மீனவ சங்க திணைக்களத்திற்கு ஒவ்வொரு நாளும் கடலுக்குப் போகாமல் அந்த திணைக்களத்திற்கு போய் வருகின்ற ஒரு நிலைதான் இப்பொழுது காணப்படுகிறது.
மேலதிகாரிகள் சொன்னால்தான் செய்ய முடியும் என்ற ஒரு நிலை இருக்கின்ற காரணத்தால், இந்த இரண்டு மாதங்களில் வந்து போன இந்த உயர் அதிகாரிகள், அமைச்சின் செயலாளர் உட்பட எல்லாரும் வந்து போனார்கள். ஆனால் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கிறது.
ஆகவே, எங்களுடைய மீனவர்களுக்கு உடனடியாக இந்த அனர்த்தங்கள் வருகின்ற போதெல்லாம் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லுகின்ற போதெல்லாம், ஏதாவது ஒரு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.பாஸ் கொடுக்கப்பட்டு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இப்பொழுது பாஸ் இல்லாது தொழில் செய்ய செல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். பாஸ் கொடுக்கப்படும் என்று தாங்கள் சென்று அதற்கான விவரங்களை அறிவிப்பதாக அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் இதுவரைக்கும் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.ஆகவே, இந்த விஷயத்தை நான் நாடாளுமன்றத்திலும் கொண்டு செல்ல இருக்கின்றேன். ஆகவே, எங்களுடைய மீனவர்களை துன்பப்படுத்த வேண்டாம் என்பதை நான் ஜனாதிபதிக்கு, இந்த அரசாங்கத்திற்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
மன்னார் மாவட்ட மீனவர்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லவில்லை. எங்களுடைய நாட்டிலே இருக்கிற அனைத்து மீனவர்களும், அனர்த்தத்தால் தொழிலுக்கு செல்லாமல் இருக்கின்ற மீனவ சமூகம், தன்னுடைய அன்றாட பிள்ளைகளுடைய கல்வி, ஏனைய விடயங்களிலே தங்களுடைய உழைப்பைத் தான் பயன்படுத்துகிறார்கள். ஆகவே அரசாங்கம் இதில் அடுத்த வரவு செலவுத் திட்டத்திலேயாவது இந்த அறிவிப்பை,நிவாரணம் கொடுக்கும் அறிவிப்பை உடனடியாக செய்ய வேண்டும்.
"இந்நாட்டிலே வருமானத்தை ஈட்டுகின்ற ஒரு தொழில் இந்த கடல் தொழில். ஆகவே வருமானத்தை, இந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தொழிலைச் செய்கின்ற என்னுடைய மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மிக மிக கவலை தருகின்ற விடயமாக இருக்கிறது.
ஆகவே இந்த அரசு, மக்களுக்காகச் செயல்படுகின்றது என்று சொல்லுகின்ற அரசு, உடனடியாக எங்களுடைய மீனவர்களுடைய எதிர்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இச்சந்தர்ப்பத்திலே நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்."
அமைச்சர் அவர்கள் எங்களது மீனவர்களை ஏமாற்றுகிறார். தொடர்ந்து இந்திய இழுவைப்படகுகளின் (டிரோலர்) வருகை மிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் அதைப் பேசித் தீர்ப்போம் என்று சொல்லி ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், எங்களுடைய மீனவர்களுடைய கஷ்டத்திலே அவர்கள் அரசியல் நடத்துவதாகத் தான் தெரிகிறது.
ஏனென்றால், இந்திய இழுவைப்படகுகள் வருகின்ற போது எங்களுடைய மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முனைகின்ற போது, அதை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் பேசுவோம் அல்லது இந்திய இழுவைப்படகுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் மூர்க்கத்தனமாக பேசுகின்ற இந்த விடயங்கள் நடைமுறையில் சாத்தியமற்ற விடயங்களைத் தான் காணப்படுகிறது.
இந்தியா செல்லுகின்ற போதெல்லாம் எங்களுடைய ஆலோசனையை நான் முன்வைக்கின்றேன். அதாவது ஆழ்கடல் தொழிலை எங்களுடைய மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் அறிமுகம் செய்து, அவர்களுக்கான உதவியை செய்கிற சூழல் ஏற்படுமாக இருந்தால், இங்கே இந்திய மீனவர்கள் எங்களுடைய எல்லைக்குள் வருகின்ற வாய்ப்பு மிக மிகக் குறைவாக இருக்கும்.
எங்களுடைய மீனவர்களும் ஆழ்கடலிலே சென்று மீன் பிடிக்கும் வருவாயைக் காட்டுகின்ற ஒரு வாய்ப்பு ஏற்படும்.ஆகவே நாங்கள் இந்தியாவிடம் இது சம்பந்தமாக கோரியிருந்தோம். அப்பொழுது நாங்கள் சென்றபோது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இருக்கின்ற போதும் அந்த சந்திப்பையும், இப்பொழுது நாங்கள் கடைசியாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசுகின்ற போது இந்த ஒரு ஆலோசனையை முன்வைத்தோம்.
ஆகவே இது நடைமுறைக்கு வந்தால் ஒழிய, இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்பது என்னுடைய கருத்து. இலங்கை அரசாங்கம் எங்களுடைய தமிழ்நாட்டுத் தமிழர்களையும் எங்களையும் அடிபட வைக்கின்ற ஒரு நிலையைத் தொடர்ச்சியாகச் செய்கின்ற ஒரு நிலை தான் காணப்படுகிறது.
ஆகவே இந்த மீனவ சமூகத்திற்கு அமைச்சராக இருக்கின்ற அமைச்சர் அவர்கள் துரிதமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை என்றால் எங்களுடைய மக்களுடைய இரண்டு தரப்பு தமிழர்களும் அடிபட்டு மிக மோசமான ஒரு சூழலுக்குப் போகின்ற ஒரு சூழலை இவர்கள் எதிர்பார்க்கிறார்களா என்ற ஒரு கேள்வி எனக்கு எழுகிறது.
ஆகவே இந்த விஷயத்திலே அமைச்சர் அவர்கள், அரசாங்கம் சரியான நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்ற ஒரு விடயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பின் போது மேலும் பல்வேறு விடையங்கள் குறித்து கருத்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.








.jpg)


.jpg)
