எலிக்காய்ச்சல் குறித்து சம்மாந்துறை விவசாயிகளுக்கு அவசர எச்சரிக்கை



சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் மாதம் முதல் நெல் வயல் வேலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், விவசாயிகள் எலிக்காய்ச்சல் நோய்த் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வயல் நிலங்களில் பணிபுரியும் போது எலிக்காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதால், இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளை விவசாயிகள் தவறாது மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக, தகுதியான விவசாயிகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் 'டொக்சிசைக்ளின்' தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, விவசாயிகள் வயல் வேலைகளுக்குச் செல்வதற்கு முன்னர் சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தை அணுகி அப் பாதுகாப்பு மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை நாட்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இத் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள் இந்த அறிவிப்பை அலட்சியப்படுத்தாது, தங்களது உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்த பின்னரே வயல் வேலைகளில் ஈடுபட வேண்டும் எனச் சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை கேட்டுக்கொண்டுள்ளது.