வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் !



நாட்டின் சில பகுதிகளில் சனிக்கிழமை (03) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களுக்கும், ஊவா மாகாணத்தின் மொணராகலை மாவட்டத்திற்குமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பக் காரணி சில இடங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி தங்களை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், முடிந்தவரை நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், நாளின் அதிக வெப்பமான நேரங்களில் கடினமான வெளிப்புற உடற்பயிற்சிகள் மற்றும் வேலைகளில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.