போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளைக் குறைக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பம்: டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவிப்பு!




போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளை குறைப்பது தொடர்பான முன்னோடித் திட்டம் நேற்று (01) வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொலிஸார் இணைந்து இந்த முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இத்திட்டம் நடைமுறையிலிருக்கும்.முன்னோடித் திட்ட காலப்பகுதியில் சாரதிகளின் புள்ளிகள் உண்மையில் கழிக்கப்படமாட்டாது எனவும், முறைமை எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விளக்கங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முறைமை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டப் பின்னர், போக்குவரத்து விதிமீறல்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மைக்கு ஏற்ப சாரதிகளின் புள்ளிகள் கழிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை குறைத்து வீதி பாதுகாப்பை மேம்படுத்த முடியம் எனவும் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.