
மஸ்கெலியா பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவகற்றும் பௌசரில் சேகரிக்கப்பட்ட கழிப்பறைக் கழிவுகளை, காசல்ரீ நீர்த்தேக்கத்தை நோக்கி வழிந்தோடும் டிக்கோயா ஆற்றில் கொட்டிய குற்றச்சாட்டில் பௌசர் சாரதியும் அவரது உதவியாளரும் அட்டன் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டன் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளை, அட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் நீர்மின் நிலையத்திற்கு அருகில் டிக்கோயா ஆற்றில் இவர்கள் கொட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்ட பிரதேசவாசிகள், அட்டன் வலயத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியாட்சகர் பிரதீப் வீரசேகரவுக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன் கழிவகற்றும் பௌசரையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவரும் இன்று வெள்ளிக்கிழமை (02) அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், இவ்வாறு சேகரிக்கப்படும் கழிப்பறைக் கழிவுகளை, இவர்கள் நீண்டகாலமாகச் சூழலில் கொட்டி வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




.jpg)







