ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபணம் – பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்



ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெண் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வெல்லம்பிட்டி பகுதியில் 4.95 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் பிரதிவாதிக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், அதற்கமைய, குற்றவாளியாகக் காணப்பட்ட குறித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.