பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு அரச, தனியார் பங்களிப்பு அவசியம் : பிரதமர் ஹரிணி அமரசூரிய முக்கிய உரை!



பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அரச மற்றும் தனியார் முதலீடுகள் அவசியம் எனவும், எனினும் அனைத்து முதலீடுகளும் கூட்டாண்மைகளும் பொறுப்புக்கூறலுடனும் முறையான ஒழுங்குமுறையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

செப்டம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையத்தின் (CWIT) இரண்டாம் கட்டத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கும் துறைமுகத் துறை பெரும் பங்களிப்பை வழங்குகின்றது.

இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அண்மையில் இலங்கை அமைந்துள்ளமை எமது நாட்டிற்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அனுகூலமாகும். எமது நாட்டில் காணப்படும் மேம்பட்ட துறைமுகக் கட்டமைப்பு, பயிற்றப்பட்ட தொழிற் படை மற்றும் சர்வதேச சந்தைக்கான அணுகல் ஆகியவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தி, நிலையான முதலீடுகளைக் கொண்டுவருவதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

CWIT முனையத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி பாரந்தூக்கிகள் (Automated Cranes), மின்சார முனைய வாகனங்கள் (Electric ITVs) மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்பு முறைமைகள் (Real-time Monitoring Systems) போன்ற நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை.

எனினும், துறைமுகத்தின் பௌதிகக் கொள்ளளவை அதிகரிப்பதுடன், இத்தகைய தொழில்நுட்பங்களைச் செயற்படுத்தக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்ப மற்றும் மனிதவளத் திறன்களை மேம்படுத்துவதும் அத்தியாவசியமானதாகும்.

பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அரச முதலீடுகளைப் போலவே தனியார் முதலீடுகளும் அவசியமாகும். எவ்வாறாயினும், அனைத்து முதலீடுகளும் கூட்டாண்மைகளும் பொறுப்புக்கூறலுடனும் முறையான ஒழுங்குமுறையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டிற்குக் கிடைக்கும் முதலீடுகளின் அளவைப் போலவே, அவற்றின் தரம், பேண்தகுதன்மை மற்றும் நாட்டின் நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய அபிலாஷைகளுடன் அவை பொருந்துகின்றனவா என்பதையும் நாம் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார எதிர்காலம், பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் நாம் கட்டியெழுப்பும் வலுவான உறவுகளிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக, எமது முக்கிய பொருளாதார மற்றும் பிராந்திய பங்காளிகளில் ஒன்றான இந்தியாவுடனான வர்த்தக, முதலீட்டு மற்றும் மக்கள் தொடர்புகளை, இரு நாடுகளினதும் பரஸ்பர அபிலாஷைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு மதிப்பளித்து மேலும் வலுப்படுத்துவதற்குப் பெரும் வாய்ப்புகள் காணப்படுகின்றன என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.