
நிலையான தன்மை இலங்கையின் பொருளாதாரத்தைக் காப்பாற்றியுள்ளது. உருமாற்றம் இனி அதை வளர்க்க வேண்டும். தரப்படுத்தல் மேம்பட்டுள்ளது. இப்போது இலங்கை இந்த நிலையான தன்மையை முதலீடு, ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார சுதந்திரமாக மாற்ற வேண்டும்.
உண்மையான பிரச்சினை இலங்கை இன்னுமொரு ஐ.எம்.எவ். நிகழ்ச்சித் திட்டத்தை விரும்புகிறதா என்பதல்ல. 2027 மார்ச் மாதத்திற்குள், நாட்டின் பொருளாதாரத்தால் போதுமான வளர்ச்சி, அரச வருமானம், ஏற்றுமதி, அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் அந்நியச் செலாவணி வருமானத்தை உருவாக்க முடிகிறதா என்பதும், அதே நேரத்தில் மற்றொரு வெளிநாட்டு நிதிப் பற்றாக்குறையை உருவாக்காமல் இருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்பி, கடன் பொறுப்புகளை நிறைவேற்ற முடிகிறதா என்பதுமே ஆகும்.
இந்த அடிப்படை அம்சங்கள் போதுமான அளவு முன்னேற்றமடைந்தால், இலங்கையால் நீடிக்கப்பட்ட நிதி வசதியை (EFF) நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்துடனான தனது சாதாரண உறவை மட்டும் தொடர முடியும். ஆனால் வளர்ச்சி 4% அளவிலேயே நீடித்து, முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீடு போதுமானதாக இல்லாமல், ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கத் தவறி, வெளிநாட்டு நிதி நெருக்கடிகள் தீவிரமடைந்தால், மற்றொரு தொடர்ச்சியான ஐ.எம்.எவ். நிகழ்ச்சித் திட்டம் ஒரு நடைமுறைரீதியான நிதியியல் மற்றும் கொள்கை தெரிவாக மாறக்கூடும். ஐ.எம்.எவ். இலிருந்து வெளியேறுவது பொருளாதார பலத்தின் விளைவாக மட்டுமே இருக்க வேண்டும்.
2022 ஆம் ஆண்டின் அரச கடன் தோல்விக்கு பிறகு பொருளாதாரம் எந்தளவு தூரம் பயணித்துள்ளது என்பதற்கான முக்கிய அங்கீகாரமாக, Fitch மதிப்பீடுகள் கடந்த வாரம் இலங்கையின் நீண்டகால வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை 'CCC+' இலிருந்து 'B-' ஆக மேம்படுத்தி, 'நிலையான தொலைநோக்கு' (Stable Outlook) நிலையையும் வழங்கியுள்ளது.
ஆனால் இலங்கை மேம்படுத்தப்பட்ட கடன் தரவரிசையை முழுமையான மீட்சியாகக் கருதி குழப்பமடையக் கூடாது. 'B-' என்பது வெற்றி விழா கொண்டாடுவதற்கானதல்ல. நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறிவிட்டார் என்றுதான் அர்த்தமே தவிர, நோயாளி முழு உடல்தகுதியுடன் இருக்கிறார் என்று அர்த்தமல்ல.
கடந்த வாரம் தனது விஜயத்தை நிறைவு செய்த ஐ.எம்.எவ்.பணிக்குழு, பொருளாதாரம் சீரடைவது சரியான பாதையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியதுடன், இரண்டாம் காலாண்டு வளர்ச்சி 4.2% ஆக இருப்பதையும், கையிருப்பு சுமார் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதையும், வலுவான நிதியியல் செயற்பாட்டையும் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், இவை நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஏழாவது மீளாய்வுக்கு முன்னதான தொழில்நுட்ப ஆலோசனைகளாகவே இருந்தன. இறுதி ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்படவில்லை என்பதுடன், எந்தவொரு உடன்பாடும் அதனுடன் தொடர்புடைய நிதிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு ஐ.எம்.எவ். நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும்.
ஆனால், அடுத்த மீளாய்வுக்கு அப்பால் ஒரு பெரிய வினா உள்ளது.
தற்போதைய ஐ.எம்.எவ். நிகழ்ச்சித் திட்டம் முடிவடையும் போது, இலங்கையால் உண்மையிலேயே சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு வலுவடைய முடியுமா?
அந்த வினாவிற்கு அரசியல் ரீதியாகவோ அல்லது உணர்வுபூர்வமாகவோ பதிலளிக்கக் கூடாது. எனவே, ஐ.எம்.எவ். நிகழ்ச்சித் திட்டம் தனது காலாவதி திகதியை அடைந்துவிட்டது என்பதற்காக மட்டுமே இலங்கை அதைவிட்டு வெளியேறக்கூடாது. பொருளாதாரம் போதுமான அளவு வலுவடையும் போது மட்டுமே வெளியேற வேண்டும்.2022 முதல் இலங்கை பல விடயங்களை அடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது, நிதியியல் செயற்பாடு மேம்பட்டுள்ளதுடன், கையிருப்பு மீட்கப்பட்டுள்ளது மற்றும் கடன் மறுசீரமைப்பு முன்னேறியுள்ளது. நமது வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிறகு, நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தை மீட்டெடுக்க ஐ.எம்.எவ். நிகழ்ச்சித் திட்டம் உதவியது. ஆனால் ஐ.எம்.எவ். மீளாய்வுகளை வெற்றிகொண்டு செல்வதால் மட்டுமே ஒரு பொருளாதாரம் மீட்சியடைந்துவிடாது.
தொழிற்சாலைகள் விரிவடையும் போதும், வணிகங்கள் முதலீடு செய்யும் போதும், ஏற்றுமதிகள் வளரும் போதும், உற்பத்தித்திறன் அதிகரிக்கும் போதும், சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் போதும் மற்றும் அவசரகால நிதியை மீண்டும் மீண்டும் கோராமல் இறக்குமதிகளுக்குச் செலுத்தவும் கடன்களைத் தீர்க்கவும் தேவையான அளவு அந்நியச் செலாவணியை நாடு ஈட்டும் போதும் மட்டுமே பொருளாதாரம் உண்மையாக மீட்சியடைகிறது.
அந்த உருமாற்றம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது.குறிப்பாக எரிபொருள் விலைகள் போன்ற புற அதிர்ச்சிகளுக்கு இலங்கை இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. அதே நேரத்தில் 2027 ஆம் ஆண்டிலிருந்து கடன் மீளச்செலுத்தல் பொறுப்புகள் மென்மேலும் முக்கியத்துவம் பெறும்.
அதனால்தான் Fitch முறைமையின் தரவரிசை உயர்வை நாம் கவனமாகவும், பகுப்பாய்வு ரீதியாகவும் ஆராய வேண்டும். அது முன்னேற்றத்தை அங்கீகரிக்கிறது, ஆனால் பலவீனங்கள் இன்னும் நீடிக்கவே செய்கின்றன.
மீண்டும் மீண்டும் ஏற்படும் சென்மதிநிலுவைச் சமநிலை (balance -of- payments) நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே ஒரு நிலையான வழிதான் உள்ளது. இலங்கை டொலர்களைத் திரும்பத் திரும்பக் கடனாகப் பெறுவதற்குப் பதிலாக, அதிகமான டொலர்களை ஈட்டவும் ஈர்க்கவும் வேண்டும்.
இதன் கருத்து ஏற்றுமதி, சுற்றுலா, வெளிநாட்டுப் பண அனுப்பல்கள் மற்றும் மிக முக்கியமாக, அந்நிய நேரடி முதலீடு (FDI) என்பனவாகும். CCC+ இலிருந்து B- ஆக மாறுவது நம்பிக்கையை மேம்படுத்தலாம், ஆனால் தரவரிசை நிறுவனங்களால் முதலீட்டை உருவாக்கித் தர முடியாது. இலங்கை அதைத் தானே செய்ய வேண்டும்.
முதலீட்டாளர்கள் எதிர்வுகூறக்கூடிய வரி விதிப்பு, நிலையான கொள்கைகள், விரைவான அனுமதிகள், அணுக்கூடிய நிலம், வினைத்திறனான சுங்கத்திணைக்களம், போட்டித்தன்மை வாய்ந்த சக்தி/மின்சாரக் கட்டணங்கள், நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பந்தங்கள் மற்றும் தங்களது பணம் வந்தடைந்த பிறகு விதிமுறைகள் மாறாது என்ற நம்பிக்கையையுமே விரும்புகிறார்கள்.
எனவே இலங்கை முதலீட்டு அனுமதிகளைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, உண்மையில் செயற்படுத்தப்பட்ட முதலீட்டை அளவிட ஆரம்பிக்க வேண்டும்.
வினாக்கள் மேலும் கடுமையானதாக இருக்க வேண்டும்.
எவ்வளவு பணம் நாட்டிற்குள் உண்மையில் வந்தது? எத்தனை உற்பத்தித் திறன்மிக்க வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன? எவ்வளவு ஏற்றுமதி செய்யப்பட்டது? எவ்வளவு தொழில்நுட்பம் வந்தடைந்தது? அந்த முதலீடுகள் எத்தகைய தொடர்ச்சியான அந்நியச் செலாவணியை உருவாக்கும்?
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான செயற்படுத்தப்பட்ட முதலீட்டை மட்டுமே ஈர்த்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது எச்சரிக்கை மணிகளை ஒலிக்க வேண்டும்.
மூலதனத்திற்கு வேகமும், நிச்சயத்தன்மையும், சீரான தன்மையும், நம்பிக்கையுமே தேவையே தவிர வாக்குறுதிகளோ, ஆவண வேலைகளோ, தாமதமான ஒப்புதல்களோ அல்ல.அரசாங்கம் இலங்கையை ஒரு முதலீட்டாளரின் கோணத்திலிருந்து பார்க்க வேண்டும். நாட்டிற்குள் நுழைவது இலகுவானதா? முதலீடு செய்வது இலகுவானதா? தொழில் நடத்துவது கணித்துச் செயற்படக்கூடியதாக உள்ளதா? நீண்டகால மூலதனத்தை நியாயப்படுத்தும் அளவுக்குப் போட்டித்தன்மை வாய்ந்ததாக உள்ளதா?
இதற்கான பதில் தெளிவான 'ஆம்' என்பதாக இல்லையெனில், பணம் வேறு இடத்திற்குச் சென்றுவிடும். உலகளாவிய மூலதனம் நாடுகள் சீர்திருத்தம் செய்யும் வரை காத்திருக்காது. அது ஏற்கனவே அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ள நாடுகளுக்கு நகர்ந்துவிடும்.
2022 முதல், இலங்கை புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நெருக்கடி முகாமைத்துவ வரி விதிப்பு, நிதியியல் ஒருங்கிணைப்பு, கடன் நிலைத்தன்மை, கையிருப்பு, பணம்சார் ஒழுங்குபடுத்தல், எரிசக்தி விலை நிர்ணயம் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீதே கவனம் செலுத்தியது.
அந்த ஒழுங்கு தொடர வேண்டும். இலங்கை கட்டுப்படியாகாத பற்றாக்குறைகளுக்கோ, நிலையற்ற மானியங்களுக்கோ அல்லது வரி செலுத்துவோரின் பணத்தில் நிரந்தரமாக நிதியளிக்கப்படும் நஷ்டமடையும் நிறுவனங்களுக்கோ மீண்டும் திரும்ப முடியாது.
ஆனால் நிதி ஒழுங்குபடுத்தலால் மட்டுமே ஒரு பொருளாதாரத்தைச் சீராக்க முடியும். அது மட்டுமே ஒரு நாட்டை வளமானதாக மாற்றிவிட முடியாது. வருமான அணிதிரட்டலானது இப்போது முதலீடு, ஏற்றுமதி, உற்பத்தித்திறன், உற்பத்தித்துறை மற்றும் தனியார் துறையின் விரிவாக்கம் ஆகியவற்றிற்கான தீவிரமான தேசிய மூலோபாயத்துடன் பொருந்தியிருக்க வேண்டும்.
எனவே, எதிர்கால ஐ.எம்.எவ். ஆலோசனைகள், இலங்கை நேற்றைய நெருக்கடி இலக்குகளை அடைந்துவிட்டதா என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஐ.எம்.எவ். உதவி இல்லாமல் தன் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான நாளைய இயலளவைக் கட்டியெழுப்புகிறதா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
2022 ஆம் ஆண்டின் வரிசைகள், பற்றாக்குறைகள், மின்வெட்டுகள், அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை மற்றும் அரச கடன் தோல்வி ஆகியவற்றிலிருந்து இலங்கை நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளது.
அந்த முன்னேற்றம் அங்கீகாரத்திற்குரியது. ஆனால் இப்போது இருக்கும் மிகப்பெரிய ஆபத்து, திருப்தியடைந்து அலட்சியமாக இருப்பதுதான், அதாவது பொருளாதாரத்தைச் சீராக்குவதை முழுமையான மீட்சி என்றும், மீட்சியை உருமாற்றம் என்றும் தவறாகப் புரிந்துகொள்வதும் தான்.
இலங்கையால் தனது எதிர்காலத்திற்குத் தானே நிதியளிக்கவும், கடன்களைத் தீர்க்கவும், அடுத்த புற அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளவும், மற்றொரு மீட்பு உதவி தேவைப்படாமல் வளரவும் முடியும். அந்த நாள்தான் உண்மையான மீட்சிக்கான அளவுகோலாகும்.








.jpg)


.jpg)
