NBRI அனுமதியின்றி மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு



புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) அனுமதி இன்றி மலையக ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

'டிட்வா' (Ditwah) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் சேதங்கள் நிமித்தம் சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையிலான ரயில் சேவை கடந்த 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும், சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டே நாட்களில், இன்று (5) அதிகாலை 4.35 அளவில் பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இஹல கோட்டே, கடிகமுவ மற்றும் கங்கொட ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் மண் மேடும் பாறைகளும் சரிந்து விழுந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. பாதையில் விழுந்த மண் மற்றும் பாறைகள் சாரதிக்குத் தெளிவாகப் புலப்படாத காரணத்தினால், ரயிலின் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டுள்ளன.

இந்த விபத்தினையடுத்து, ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மாற்றுப் பாதைகள் ஊடாகக் கடிகமுவ பேருந்து வீதியை அடைந்து, அங்கிருந்து பேருந்துகள் மூலம் ரம்புக்கனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் குறித்த பயணிகள் ரம்புக்கனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்காக மேலதிக ரயில் ஒன்றை ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.