
உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Grand Theft Auto VI (GTA 6) வீடியோ கேம், வெளியான முதல் நாளிலேயே 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 1.1 இலட்சம் கோடி இலங்கை ரூபாய்) விற்பனை வருவாயைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் உலக பொழுதுபோக்குத் துறை வரலாற்றில் மிகப்பெரிய வெளியீட்டு சாதனையை GTA 6 படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Rockstar Games நிறுவனத்தின் தாய் நிறுவனமான Take-Two Interactive வெளியிட்டதாகக் கூறப்படும் தகவலின்படி, நவம்பர் 19ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற முதல் நாள் விற்பனையின் அடிப்படையில் இந்த வருவாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உத்தியோகபூர்வ வெளியீட்டிற்கு முன்னதாகவே சுமார் 3.25 கோடி பிரதிகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான GTA 5, முதல் ஐந்து நாட்களில் சுமார் 1.15 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயைப் பெற்றிருந்தது. தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் GTA 6, அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.
புதிய GTA 6 விளையாட்டில் லூசியா (Lucia) மற்றும் ஜேசன் (Jason) ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான லியோனிடா (Leonida) மாநிலத்தில் விளையாட்டின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இணையப் பயன்பாட்டிலும் சாதனை
GTA 6 வெளியீட்டைத் தொடர்ந்து உலகளவில் இணையப் பதிவிறக்கப் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Cloudflare நிறுவனத்தின் தகவலின்படி, பிரித்தானியாவில் PlayStation 5 பதிவிறக்கப் போக்குவரத்து வழக்கத்தை விட 8.6 மடங்கும், நியூசிலாந்தில் சுமார் 15 மடங்கும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது PlayStation 5 மற்றும் Xbox விளையாட்டு சாதனங்களில் கிடைப்பதாகக் கூறப்படும் GTA 6 இன் மொத்த விற்பனையில் சுமார் 75 வீதம் PlayStation பயனர்களிடமிருந்து கிடைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டை உருவாக்குவதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், GTA 6 இன் கணினிப் பதிப்பு மற்றும் இணையவழி பலர் இணைந்து விளையாடும் பதிப்பு ஆகியவற்றின் வெளியீட்டுத் திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.












