
முல்லைத்தீவு மாவட்டம் துனுகாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் குடிநீர் விநியோக திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (24) பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
உலக வங்கி மற்றும் இலங்கை அரசின் 2,500 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட கரும்புள்ளியான் குடிநீர் திட்டமானது மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செலயக பிரிவுகளைச் சேர்ந்த 23,600 பொது மக்களை இலக்காக கொண்டு 24 மணி நேர நீர் விநியோக சேவையாக நாள் ஒன்றுக்கு 4,000 கன அடி நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகத்தை மேற்கொள்ளும் திறனுடன் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நாளைய தினம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச்எம் சுசில் ரணசிங்க ஆகியோர் பொது மக்களின் பயன்பாட்டிற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக சிறுநீரக நோயாளிகளை கொண்ட இரண்டாவது பிரதேசமாக மாந்தை கிழக்கு மற்றும் துனுக்காய் பிரதேசங்கள் காணப்படுகின்றன. எனவே, நீண்ட கால சிறுநீரக நோய்களுக்கு தீர்வு காணவும், மக்களுக்கு சுத்தமான குடிநீரினை தடையின்றி வழங்குவதனையும் நோக்காக கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இப்பிரதேச வாழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிடைக்கிறது.












