கம்பி வலையில் சிக்கி சிறுத்தை படுகாயம் – மீட்பு நடவடிக்கை தீவிரம்!



அட்டன், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலைத் தோட்டப் பகுதியில் இரைதேடிச் சென்ற சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் நன்கு வளர்ந்த சிறுத்தையொன்றே இன்று வியாழக்கிழமை (12) இவ்வாறு சிக்கியுள்ளது.

தேயிலைத் தோட்டத்தில் நீரோடைக்கு அருகிலுள்ள புதரொன்றில் கட்டப்பட்டிருந்த கம்பி வலையில் சிறுத்தையின் வயிற்றுப் பகுதி சிக்கியுள்ளதாகவும், அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது அதன் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரைதேடி தேயிலைத் தோட்டத்துக்குள் வந்தபோதே சிறுத்தை வலையில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதுடன், தற்போது அது புதருக்கு அருகிலுள்ள பாறையொன்றின் மீது படுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலையில் சிக்கியுள்ள சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தி, அதனைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை நல்லதண்ணி வனஜீவராசிகள் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.