போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்து விற்பனை – இருவர் கைது!



போலி சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து பணத்திற்கு விற்பனை செய்த நபர் ஒருவரும், போலியாகத் தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றைத் தம்வசம் வைத்திருந்த மற்றுமொருவரும் நேற்று (11) புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அங்கொடை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதியை சேர்ந்த 32 மற்றும் 52 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர சந்திப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, போலியான சாரதி அனுமதிப்பத்திரத்துடன் ஒருவரை நுகேகொட பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, குறித்த சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, போலியாகத் தயாரிக்கப்பட்ட 12 சாரதி அனுமதிப்பத்திரங்களையும் 08 போலியான தேசிய அடையாள அட்டைகளையும் தம்வசம் வைத்திருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.