பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்துச் சோதனைகள் தீவிரம்!



எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் போக்குவரத்துச் சோதனைகள் மற்றும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவிக்கையில்,

இம்முறை போதைப்பொருள் பாவனையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்குத் தேவையான அளவு சுவாசப் பரிசோதனைக் கருவிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் எழுந்தமானமாகப் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், வீதி விபத்துகளில் சிக்கும் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார்களா என்பதை உறுதிப்படுத்தக் கட்டாயப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் போக்குவரத்துச் சட்டங்கள் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும். மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பாவனையிலோ வாகனம் செலுத்துவதைத் தவிர்த்துப் பொறுப்புடன் செயற்படுமாறு சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.