
கலை மரபுகள் குறித்த ஆழமான அறிவுடையதும் அவற்றின் பெறுமதியை உணர்ந்ததுமான ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குத் தேவையான அடித்தளத்தை அமைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், மக்களிடையே பரிவு, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை வளர்க்கும், பிறரின் துன்பத்தை உணரச் செய்யும், வேறுபாடுகளை மதிப்பதற்கு வழிகாட்டும் கலை உருவாக வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ‘சாம நாட்டிய நாடகத்தின்’ 40 வருடப் பயணத்தைக் கொண்டாடும், அதன் மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் “TRIBUTE TO LEGENDS” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், கலைத்துறை ஜாம்பவான்களான கலாகீர்த்தி ரவிபந்து வித்தியாபதி, பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க, கலாநிதி சன்ன விஜேவர்தன, சாம நாட்டியத்தின் முன்னோடிகளில் ஒருவரான நவீன் குணரத்ன ஆகியோர் உள்ளிட்ட சாம நாட்டிய நாடகத்தின் கலைஞர்களின் கடந்த காலப் பணியைப் பாராட்டி, பிரதமரால் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.
சாம நாட்டிய நாடகத்தின் 40 வருடப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இலங்கைத் தபால் திணைக்களத்தினூடாக நினைவு முத்திரையும் முதல்நாள் உறையும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
“40 வருடங்களாக ‘சாம நாட்டிய நாடகத்தில்’ இணைந்து கட்டியெழுப்பப்பட்ட இப்பயணம் வெறும் வரலாறு மட்டுமன்று; அமைதி, சகவாழ்வு குறித்த கருத்தைக் கலையினூடாகச் சமூகமயமாக்கிய நீண்டகாலக் கலைப்பணியாகும். 1985ஆம் ஆண்டில் நவீன் குணரத்னவின் எண்ணக்கருவுக்கு அமைய இது ஆரம்பிக்கப்பட்டது. அதனூடாக, இந்நாட்டின் நாட்டிய நாடகக் கலையில் புதிய அத்தியாயம் ஒன்று உதயமானது.
உள்நாட்டு நடனக் கலைஞர்கள் தமது திறமைகளை மெருகூட்டிக்கொள்ளவும் சர்வதேச மேடை வரை பயணிக்கவும் வாய்ப்புகள் திறக்கப்பட்டதும், அதனூடாக முன்னேறக்கூடிய திறமையான கலைஞர் தலைமுறையொன்று உருவானதும் ஒரு நாடாக நாம் அடைந்த வெற்றியாகும். மொழி, இனம், மதம், கலாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் பிளவுபட்டுள்ள மக்களுக்குக் கலையினூடாக ஒரே மனிதாபிமானச் செய்தியைக் கொண்டுசேர்க்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியது மகத்தான பணியாகும்.
அதுபோலவே, இன்றைய நிகழ்வு சாம நாட்டிய நாடகத்தின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்களின் பல படைப்புகளை ஒரே மேடையில் கண்டுகளிப்பதற்குக் கிடைத்த தனித்துவமான வாய்ப்பாகும். இக்கௌரவிப்பு கடந்த காலப் பணியை நினைவுகூர்வதோடு மட்டுப்படாமல், கலை மரபுரிமையை எதிர்காலத்திற்குக் கொண்டுசென்று, மேலும் அமைதியானதும் உணர்திறன் மிக்கதுமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்புக் குறித்த செய்தியை எதிர்வரும் பல தலைமுறைகளுக்கும் கொண்டுசெல்வதற்கான சந்தர்ப்பமாகவும் அமைகிறது, என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிரேஷ்ட நடனக் கலைஞர் சந்தன விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளான கலைஞர்கள் கலந்துகொண்டனர்.












