வரவு செலவுத் திட்டத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சி விசேட கலந்துரையாடல் !


2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சியினர் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசாங்கத்தின் பொருளாதாரச் செயற்பாடுகள், முந்தைய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அமுலாக்கம், வரிவிதிப்பு, வறுமை நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

அரசாங்கம் உண்மையான பொருளாதாரத் தரவுகளை மறைத்து, தனது கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காகத் தவறான புள்ளிவிவரங்களை முன்வைப்பதாக சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.

மேலும், IMF ஒப்பந்தத்தின் கீழ் தேவையானதை விட அதிகமான வரிச்சுமையை மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ளதாகவும், மக்களுக்குப் போதுமான நிவாரணங்களை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் 220 இலட்சம் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் IMF ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் செயல்திறன் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் மற்றும் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் நோக்கில் oversight.lk என்ற புதிய இணையத்தளத்தை எதிர்க்கட்சி நவம்பர் 11ஆம் திகதி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இணையத்தளத்தின் ஊடாக முந்தைய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அமுலாக்கம், அமைச்சுக்களின் செயற்பாடுகள், அரச வருமானம் மற்றும் செலவினங்கள், அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தனது அரசாங்கத்தின் மூன்றாவது தேசிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.