மாற்றுக் கல்வியலாக சிறுவர் கூத்தரங்கும் மழைப்பழம் வடமோடிச் சிறுவர் கூத்தும்

அதிநவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் தடம் மாறி இடம் மாறி ஆபத்தான சூழலுக்குள் வாழத் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றோம். 

இதுதான் நவீனம், நாகரீகம், என பழையதை மறந்து புதியதன் பின்னால் ஓடித் திரிந்ததன் விளைவு இன்று எதிர் வீட்டுக்காரரின் பெயர் கூடத் தெரியாத அவலம். அதிலும்  தாய் தந்தையருக்கு பிள்ளைகள் பற்றிய தெளிவும் புரிதலுமற்ற நிலை கொடுமையிலும் கொடுமை. பிள்ளை தமது கௌரவத்தை அந்தஸ்தை காப்பாற்ற வேண்டும் என்ற பெற்றோரின் ஒற்றைக் குறிகோள் இன்றைய இளம் தலைமுறையினரின் எதிர்கால குறிகோள்களை அழித்தொழித்து வருகின்றது. இன்றைய பிள்ளைகளுக்கு தேவை நான்கு சுவருக்குள் அடைத்து வைத்து கற்பிக்கும் கல்விமுறையல்ல. அவர்கள் சுதந்திரப் பறவைகளாய் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்களாய் சுய சிந்தனையுள்ள எதிர்காலத் தலைவர்களாய் உருவாக்கும் வழிமுறைகளும் கற்றல் செயற்பாடுகளுமே.

பிள்ளைகள் இயல்பாகவே கற்கும் திறனுடையவர்கள். அவர்கள் யாரும் சொல்லி நடக்கவில்லை, யாரும் சொல்லி பேசவில்லை. யாரும் சொல்லி உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொன்றாக கற்று அதனை தனது இயல்பாக்கிக் கொண்டு ஒவ்வொரு வளர்ச்சி படிநிலைகளையும் அடைகின்றது. பெரியவர்களான எமது கடமை வாழ்வதற்கான வழியை காட்டுவதே! மாறாக கை விரலை பிடித்து இழுத்து செல்வதில்லை.

இன்றைய கலைத்திட்டம் மாணவர் மையம் என்ற போதிலும் கற்பித்தல் அதன் வழி நடக்கின்றதா என்பதுதான் கேள்விக்குறி. தரம் 05 புலமைப்பரீட்சை தாள் தரம் 10 மாணவர்களாலும் விடையளிக்க முடியாது தடுமாறுகின்ற நிலைப்பாட்டை நாம் யதார்த்தமாக காணலாம். இந்நிலையில் போட்டிப் பரீட்சையும் கற்பித்தல் செயற்பாடுகளும் சிறுவர்களை கல்வியை ஒரு சுமையாக நினைத்து வெறுக்கின்ற  நிலைப்பாட்டிற்கு இட்டு செல்கின்றன. சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்ற இக்கல்வியியல் முறை இன்று தேவைதானா? புத்தகக் கல்வி மட்டும் ஒருவரை புத்திசாலியாக்கிவிட முடியாது; ஏட்டுக்கல்வி மட்டும் ஒருவரை எட்டாத தூரத்திற்கு அழைத்துச் செல்லமுடியாது. இங்கு தான் மாற்றுக்கல்வி முறையியல் தேவைப்படுகின்றது. அந்தவகையில்  சிறுவர்களுக்கே உரித்தான, சிறுவர்களை மையமாகக் கொண்ட சிறுவர் அரங்க செயற்பாடுகள் சிறுவர்களது சுய ஆளுமைகளை, படைப்பாற்றல்களை, திறன்களை, சுயசார் சிந்தனைகளை விருத்தி செய்வதாக விளங்குகின்றன. இங்கு ஒரு மாற்றுக் கல்வியியலாக சிறுவர் அரங்கு தொழிற்படுகின்றது.

இது ஒருபுறமிருக்க சமூக ஒன்றிணைவிற்கான களமாக பாரம்பரிய அரங்குகள் தொழிற்பட்டு வருகின்றமை நாம் அறிந்த ஒன்றே. ஏலவே குறிப்பிட்டது போல பக்கத்து வீட்டுக்காரருடன் நேரத்தை பகிர்ந்துக்கொள்வதும் உறவுக்காரர்களை பார்த்து பழகிக்கொள்வதும் ஊர்காரர்களைப் பற்றி அறிந்துக்கொள்வதும்  உலக நடப்புக்களை தெரிந்துக்கொள்வதும் இப்பாரம்பரிய அரங்கில்தான்.

இவ்வண்ணம் சமூகங்களை இணைந்து உறவாட வைக்கும் சக்திமிக்க இப்பாரம்பரிய அரங்குகள் இன்றைய காலகட்டத்தின் கட்டாயத் தேவைப்பாடாக உள்ளன. குறிப்பாக கூத்தரங்குகள் மனிதரை இணைக்கவல்ல ஆக்கப்பூர்வ சிந்தனையாளர்களாக உருவாக்கும் வகையில் தொழிற்பட்டு வருகின்றன. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் வாழ்ந்து மகிழ்கின்ற இடமாக உள்ளது. பாரம்பரிய அரங்கில் பிள்ளைகள் எனும் போது சிறுவர்கள் வாய்ப்பார்ப்போராக, கதை கேட்டு ஓரளவு சொல்லக் கூடியவர்களாக, ஆட்டங்களை ஆடி பார்த்து விளையாடுவோராக, பாட்டை விளையாட்டாக பாடிப்பார்ப்போராக இருந்துள்ளனர். ஆனாலும் தொலைக்காட்சி பெட்டியை பார்த்து மகிழ்ந்ததை விட கூத்தரங்கில் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்களாக இருந்துள்ளமை உண்மை. எனவே சிறுவர்களுக்கான அந்த மகிழ்வை கொடுக்கின்ற பாரம்பரிய கூத்தரங்கினை மாற்றுக் கல்வியல் அரங்காக பார்த்ததன் விளைவு சிறுவர்களுக்கான சிறுவர் கூத்தரங்கு ஆகும்.

அதாவது பாரம்பரிய தளத்தில் நின்று பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் எண்ணப்பாடுகளிலிருந்து முகிழ்ந்த எண்ணக்கருவாக சிறுவர் கூத்தரங்கு காணப்படுகின்றது. பாரம்பரிய அரங்கினையும் சிறுவர் அரங்கப் பண்புகளையும் இணைத்து முற்றிலும் சிறுவர்களுக்கான அரங்காக இச்சிறுவர் கூத்தரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்கள் தமது திறமைகளை, தமக்குப் பிடித்தமான விடயங்களை, அவற்றோடு வாழ்விற்கான படிப்பினைகளை வற்புறுத்தலின்றி விருப்பத்தோடு கற்றுக் கொள்கின்றனர்.

அந்தவகையில் நந்திப்போர் கூத்தே ஈழத்து முதல் சிறுவர் கூத்து என கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் குறிப்பிட்டாலும் சிறுவர் அரங்கப் பண்புகளின் போதாமையை உணர்ந்து சிறுவர்களுக்கான முதல் கூத்தாக மழைப்பழம் என்னும் வடமோடி சிறுவர் கூத்தை கூத்துப் புலவர் செ.சிவநாயகம் அவர்களினால்  சிறுவர் கூத்தின் மூலப்பிதா கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய கிரிஜா கதையினைக் கருவாக கொண்டு பல்வேறு கலந்துரையாடல் மற்றும் கடின உழைப்பிற்கூடாக பல்வேறு பரிணாமங்களோடு உருவாகப்பட்டுள்ளது.

அதாவது  பெண்களின் அறிவாற்றல்களை எடுத்துரைக்கும் கருவினை கதையாக கொண்டதே மழைப்பழம். வீட்டில் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்குமான பெற்றோரின் வித்தியாசமானப் பார்வையைக் கூறுவதோடு சிறுமியின் புத்தி சாதூரியத்தால் மழைப்பழம் கவர்ந்து சென்ற அரக்கனை வென்று, அவனால் கல்லாக்கப்பட்ட ஆண்களுக்கு உரு கொடுத்து உடனழைத்து வந்து அரசரிடமிருந்து பாதி இராச்சியத்தையம் பொற்காசகளையும் பரிசாக பெற்றுக் கொள்வதை மழைப்பழம் எடுத்துரைக்கின்றது.

“பெண் என்றால் வீட்டு வேலை செய்வது தான் நியாயம்” என்ற நிலைப்பாட்டை மாற்றி உரைக்கும் மழைப்பழம் சிறுவர்கள் விரும்பும் விடுகதைகளையும் இலகுவான பாடல்களையும் அவர்களுக்குப் பிடித்த பாரம்பரிய ஆட்ட முறைகளையும் அவர்களுக்கு இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய கதையோட்டத்தினையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்வதான கோழைத்தனத்தை நிராகரிப்புச் செய்கிறது. வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல படிப்பினைகளை எடுத்துரைக்கின்றது.

அந்தவகையில் மழைப்பழம் சிறுவர் கூத்து முதன்முதலில் 2012ம் கி.ப.க நுண்கலைத்துறை மாணவர்களும் மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவினரும்; இணைந்து அரங்கேற்றம் செய்ய 2013ம் ஆண்டு கி.ப.க நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களும் இணைந்து பழகி மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழாவில் கோயில் முன்றலில் வட்டக்களரியமைத்து ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது. இக்கூத்தினை அண்ணாவியார் ஞானசேகரம் அவர்களும் கூத்துப்புலவர் சிவநாயகம் அவர்களும் பயிற்றுவித்திருந்தனர்.
முதல் அரங்கேற்றத்தில் அரக்கனை சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளவாறே கொடுமைக்காரனாக, வேண்டுமென்றே மகதநாட்டு மழைப்பழத்தைக் கவர்ந்து சென்றவனாக உருவாக்கியிருந்தனர். அரக்கன் என்றாலே கொடியவன்தான் என்ற நிலைப்பாட்டில் சமூகம் அதனை ஏற்றுக்கொண்டது.

இரண்டாவது தடவையாக களரிகண்ட மழைப்பழம் கூத்தில் அரக்கன் பாத்திரம் சில சில மாற்றங்களோடு மீளுருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. அதாவது சிறுவர் கூத்து என்பதாலும் சமஸ்கிருதமும் ஆகமங்களும் கட்டுருவாக்கி வைத்திருந்த அரக்கனை கொடியவனாகக் காட்டும் நிலையை கட்டவிழ்க்க வேண்டிய தேவைப்பாடு உள்ளதாலும் அரக்கன் பாத்திரம் சிறுவர்களுக்குப் பிடித்த, சிறுவர்களோடு சிரித்துப் பேசி விளையாடும் நகைச்சுவைப் பண்பு கொண்ட பாத்திரமாக உருவாக்கப்பட்டது. இதற்கு பலவழிகளிலும் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. அரக்கன் பாத்திரம் ஏற்றிருந்த விரிவுரையாளர் சு.சந்திரகுமார் அவர்கள் சிறப்பாக தமது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார். உடை ஒப்பனைக்கூடாகவும் கையில் வைத்திருக்கும் கதாயுதம் முதலிய ஆயுதங்களுக்கூடாகவும் நடிப்பிற்கூடாகவும் நகைச்சுவையை வெளிப்படுத்தி சிறுவர்களை, கூடியிருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தியிருந்தார். இவ்வகையில் இரண்டாவது மழைப்பழ சிறுவர் கூத்தில் புதிய சிந்தனைகளோடு உருவாக்கப்பட்டிருந்த அரக்கனை மக்கள் ஆதரித்திருந்தனர்.

மூன்றாவது பரிணாமமாக அண்ணாவியார் தம்பிமுத்து அவர்களைக் கொண்டு தி.துலக்சனா அவர்களின் இறுதிவருட ஆய்வுகற்கையில் சித்தாண்டிக் கிராமத்துச் சிறுவர்களைக் கொண்டு பாரம்பரிய கூத்தரங்கின் தொடர்செயற்பாடுகளான சட்டம் கொடுத்தல், சதங்கையணி விழா, அரங்கேற்றம், வீட்டுக்கு வீடு ஆடுதல் என்ற ஒழுங்கமைப்பின் கீழ் பாரம்பரிய கூத்தாக மழைப்பழம் சிறுவர் கூத்து ஊருக்குள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இக்கூத்தில் சிறுவர்களைக் கவனத்தில் கொண்டு ஆட்டமுறைகள், பாட்டுக்கள் என அனைத்திலும் மாற்றங்களைக் கொணர்ந்து அச்சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் இலகுவான நடையில் மழைப்பழம் ஆற்றுகை 2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கூத்துக் களரியில் மகிழ்ச்சியான, தயக்கமற்ற சிறுவர்களை காணக்கூடியதாக இருந்தது. ஊரவர் ரசிக்கும்படியான ஆற்றுகைகளை தமது திறமைக்கூடாக இச்சிறுவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் தடம் பதித்து வந்த மழைப்பழம் சிறுவர் கூத்து முக்கியமான மாற்றங்களோடு இ.கங்கைகோபாலன் அவர்களின் இறுதி வருட ஆய்வாக களரி கண்டது வரவேற்கத்தக்கதாகும். இக்கூத்து அரக்கனின் செய்கைகளுக்கு காரண காரியங்களை அலசி ஆராய்கின்றது. மழைப்பழத்தை கவர்ந்து சென்ற அரக்கனின் அதாவது மலையரசனின் நியாயப்பாடு ஆக்கப்பூர்வமான சமூக கருத்தியலாக வெளிக்கொண்டு வந்துள்ளமை சிறப்பு.

அதாவது இயற்கை எழில்மிகு மலையில் நிரைவான மரங்களோடு மலையரசனாக(அரக்கன்) சந்தோ~மாக வாழ்ந்து வர மனிதரின் (மன்னர்) செயற்பாடுகளால் அரக்கன் கடுமையாக பாதிக்கப்படுகின்றான். அரண்மனை கட்டுவதற்காக களவுத்தனமாக மலையிலுள்ள மரங்களெல்லாம் வெட்டப்படுகின்றன. அரக்கன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இதனால் வறட்சி ஏற்பட்டுவிடவே கோபம் கொள்ளும் அரக்கன் வறட்சி ஏற்பட்டதற்கான காரணத்தை மன்னருக்கு புரிய வைப்பதற்காகவே மழைப்பழத்தை எடுத்துச் செல்கிறான். இங்கு அரக்கனின் செயற்பாட்டிற்கான நியாயப்பாடு எடுத்துரைக்கப்பட்டு மன்னனும் தன் தவறை உணர்ந்து அரக்கனிடம் மன்னிப்பு கேட்பதாய் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் அரக்கன் பாத்திரம் மீளுருவாக்கம் செய்யபட்டது எனலாம்.

வரலாற்று புராண இதிகாசங்கள் எப்போதும் தேவர்களின் நியாயப்பாட்டை மட்டுமே வலியுறுத்துமே தவிர அசுரர்களாக கட்டமைக்கப்பட்டுள்ளோரின் நியாயப்பாட்டை பெரிதாக பேசுவதில்லையே! இராமாயணத்தில், மகாபாரதத்தில் தேவர்கள் இழைக்கும் அநீதிகள் மூடி மறைக்கப்பட்டு மறுபக்கத்திலுள்ளோரின் சிறு பிழையும் பெரிதாக கட்டமைக்கப்பட்டு அவர்களை கொடியவர்களாகவே மனப்பதிவு செய்விக்கும் செயற்பாடுகள் காலம் காலமாக நடந்தேறி வருவதும் அதை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு பிதற்றித் திரிவதும் அதன் பின்னே ஓடித் திரிவதும் எமக்கொன்றும் புதிய விடயமல்லவே! “ஒரு வகையில் இன்று உலகத்தில் எல்லோரும் தவறிழைப்பவர்களாக இருந்தும் தவறு செய்யும் போது அகப்பட்டுக் கொண்டவரை மட்டும் பெரும் குற்றவாளியாக அறிவிப்புச் செய்து தண்டனைக் கொடுப்பதும் அவருக்கு எதிராக போராட்டம் செய்வதும், கலகம் விளைவிப்பதும் புராண இதிகாச கட்டமைவுகளின் தொடர்ச்சியே ஆகும்” என்பார் கலாநிதி சி.ஜெயசங்கர்.

இவற்றைக் கவனத்தில் கொண்ட நமது மழைப்பழ சிறுவர் கூத்தில் அரக்கன் நடிப்பிலும் சரி உடை ஒப்பனையிலும் சரி எல்லா விதத்திலும் எல்;லோருக்கும் பிடித்தமான ஒருவனாகவே வலம் வருகின்றான். இது ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாகும். இப்பாத்திரத்தை (கூத்தை) ஏற்று நடித்த பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டாளரான இ.கங்கைகோபாலன் சிறப்பாக தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். பாராட்டுக்கள்.
இச்சிறுவர் கூத்தில் கூத்தர்களாக புது வடிவம் ஏற்ற யாழ் சுதுமலை சிந்மய வித்தியாலய மாணவர்கள் உண்மையில் சிறப்பாக தமது திறமைகளை, ஆளுமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். வாழ்த்துக்கள். வகுப்பறையில் பின்வரிசை மாணவர்களாக இனங்காணப்பட்டிருந்த சில பிள்ளைகள் இச்சிறுவர் கூத்தரங்க செயற்பாடுகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்ததோடு ஆர்வமுடன் ஆடலையும் பாடலையும் கற்றுக் கொண்டு கூத்தரங்கின் பல்வேறு செயற்பாடுகளிலும் தங்களால் இயன்றளவு உதவிகளை செய்பவர்களாக, துடிப்பான பிள்ளைகளாக செயற்பட்டமை அனைவருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்சியையும் கொடுத்தது.

அத்தோடு இரண்டாம் பாடினி, தாய் வேதவல்லி போன்ற சில பிள்ளைகள் இதற்கு முன்னர் தாம் எந்த கலைநிகழ்ச்சிகளிலும் பங்குப் பற்றியதில்லை எனவும் சிறுவர் கூத்துப் பழகுவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் கூறியமை இங்கு நினைவுக்கொள்ளத்தக்கது. அதேநேரம் தங்களுக்குள் சில நேரங்களில் முரண்பட்டுக் கொண்டாலும் கூத்துப் பழக ஆரப்பித்ததும் எல்லாவற்றையும் மறந்து சகநண்பர்களுக்கு பாட்டு எடுப்பதில், ஆட்டம் ஆடுவதில் உதவி செய்து மகிச்சியடைகின்ற தருணங்கள் மிகமுக்கியமாகப்பட்டது.

கூட்டாக இணைந்து கற்றல்,  பாரம்பரிய கூத்தரங்குப் பற்றிய புரிதலைக் கற்றல், வட்டக்களரி பற்றிய தெளிவினை கற்றல், அண்ணாவியார்களை மதித்தல், தாளம் போடுதல், தரு எடுத்தல், தாளத்திற்கு ஏற்ப ஆட்டங்ளை நினைவிற் கொள்ளல், மாலை கட்டுதல், தான் ஏற்ற பாத்திரத்தை திறப்பட வெளிப்படுத்தல், எதற்கும் முன்வருகின்ற தைரியத்தைக் ஏற்படுத்திக்கொள்ளல், இலகுவாக ஒரு விடயத்தைக் புரிந்து கொள்ளல், நேரத்திற்கு வரப்பழகுதல், கிரகித்தல், மற்றவர்களுக்கு விருப்பத்தோடு உதவி செய்தல், சந்தேகங்களை கேட்டு விடையறிதல் இப்படி பல விடயங்களை கற்றுத் தேர்ந்துள்ளமையை அவதானிக்க முடிந்தது. அதற்கு பிரதான காரணம் சிறுவர் கூத்தரங்க வெளியும் பயிற்றுவித்த அண்ணாவிமார்களுமே.

பிள்ளைகளோடு பிள்ளைகளாக இணைந்து அவர்களுக்கு கூத்தினை கற்பித்த முறை இன்றைய பாடசாலை ஆசிரியர்களுக்கு தேவையான அவர்கள் கற்றுக்கொள்வதற்கான கற்பித்தல்முறைகளை கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. அண்ணாவியார் திரு செ.ஞானசேகரம்; அவர்களும் ஏட்டண்ணாவியார் திரு சிவநாயகம் அவர்களும் பிள்ளைகளோடு கொண்ட உறவு, பிள்ளைகளை சிறந்த கற்றலுக்கு இட்டுச் சென்றது. அண்ணாவியார்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு மிக நெருக்கமானதாக இருந்தது. அதேவேளை தமது கேள்விகளை எவ்வித தயக்கமுமின்றி கேட்பதும் அண்ணாவியாருக்கே தரு எடுத்துக் கொடுப்பதும் தாராளமாக இடம்பெற்றது. பிள்ளைகள் பல குறும்புகள் செய்த போதும் பிழைவிட்டு பிழைவிட்டு கற்ற போதும் எவ்வித கோபமோ மனசஞ்லமோ இன்றி பொறுமையாக மிகவும் நிதானமாக கற்பித்தமை உண்மையில் பாராட்டுக்குரியது. பாடம் புகட்டும் ஒரு ஆசானுக்கு உரித்தான அடிப்படை விடயங்களை நாம் இவர்களிடமிருந்து  கற்றுக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இன்று மழைப்பழம் சிறுவர் கூத்து முழுமையான சிறுவர் கூத்தாக அரங்கேறியமையில் இவர்களுக்கு தனியிடம் உண்டு. இவர்கள் பற்றிய முழுமையான அறிவு தனியான ஆய்விற்குரியது.

இவ்வகையில் மழைப்பழம் சிறுவர் கூத்தில் எனது அனுபவம் எனும் போது 2013ம்; ஆண்டு மாமாங்கேஸ்வர ஆலயத்தில் அரங்கேற்றப்பட்ட கூத்தில் மூன்றாம் பாடினிக்கு ஆடியிருந்தேன். கூத்து அனுபவம் இல்லாத எனக்கு இது ஒரு புதிய அனுபவமாக, புதிய கற்றலாக அமைந்தது. அதன் பின்னரான எனது கற்றல் செயற்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த அனுபவ கற்றலைக் கொண்டு இம்முறை கற்கைகோபாலன் அவர்களின் ஆய்விற்காக 2015 மழைப்பழ கூத்தர்களான யாழ் சுதுமலை சிந்மய வித்தியாலய பிள்ளைகளோடு இணைந்து வேலை செய்ய முடிந்தது. பிள்ளைகளுக்கு ஆட்டம் பழக்குதல், பாட்டு சொல்லி கொடுத்தல், நடிப்பினை, உடல் மொழியினை செம்மைப்படுத்தல், ஒப்பனை செய்தல், பிற்பாட்டு பாடுதல் என்பனவற்றில் உதவி செய்ததோடு பிள்ளைகளிடமிருந்து அண்ணாவிமார்களிடமிருந்து நிறைய விடயங்களை கற்றும் கொண்டேன். இது எனக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகவே எண்ணுகின்றேன்.

மற்றும் களரி கட்டுவது முதல் கூத்தரங்கின் பல்வேறு செயற்பாடுகளிலும் முன்னின்று உழைத்த விரிவுரையாளர் சு.சந்திரகுமார், அரங்க ஆர்வலர் ராஜதிலகன், உதவி விரிவுரையாளர் ச.சரணியா, நுண்கலைத்துறை மாணவர்களான ந.கோகுலன் மற்றும் ஜெயகாந்தன், ஆய்வாளருக்கு எல்லா வகையிலும் உதவி செய்து கொண்டிருக்கின்ற திருமதி கங்கைகோபாலன் ஆகியோருக்கும் கூத்து அரங்கேற்றத்தில் முக்கிய இடம் உண்டு, வாழ்த்துக்கள்.   

இவ்வாறு பல்வேறு உழைப்புகளுக்கூடாக அரங்கேற்றப்பட்ட மழைப்பழம் வடமோடி சிறுவர் கூத்து பலருக்கும் நல்ல படிப்பினைகளை, அனுபவ கற்றலை கொடுத்திருந்தது என்பதோடு சமூகத்திற்கு தேவையான கருத்தியல்களையும் முன்மொழிந்து சமூக மாற்றத்துக்கான, சமூக விடுதலைக்கான அரங்காக யாழ்ப்பாண மண்ணில் தடம் பதித்து வந்தது.

இவ்வகையில் சிறுவர் கூத்தரங்கு எண்ணக்கருவின் தந்தையும் ஆய்வு ஆலோசகரும் வழிகாட்டியுமான கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களுக்கும் பவ்வேறு இடர்களையும் தாண்டி ஆய்வினை செவ்வனே, காத்திரமாக முன்னெடுத்துச் செல்கின்ற ஆய்வாளர் இ.கங்கைகோபாலன் அவர்களுக்கும் முறையே நன்றிகளும் வாழ்த்துக்களும்.

குழந்தைவேல் ஞானவள்ளி
நுண்கலைத்துறை
கி.ப.க