இன்றிரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
வட மேல் மாகாணத்தில் பல பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சில குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் நேற்று இரவு சிலாபத்தில் ஆரம்பித்து, அவ்வாறான விடயங்களை பல இடங்களில் செய்துள்ளனர். இதன்போது இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் அந்தப் பகுதியில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோர் இன, மத, கட்சி, பதவி பாகுபாடுகளை பொருட்படுத்தாது இந்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அப்பாவி மக்களின் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முயலும் குறிப்பாக மதுபோதையில் செயற்படுவோருக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றேன். இராணுவத்தினர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். புத்திசாதுர்யமாக செயற்படாதவர்கள் தொடர்பில் தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு இராணுவத்தினர் தயார் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகின்றேன். வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையில் முப்படையினருக்கும் பொலிஸருக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். சுமுகமாக தீர்வு காண்பதற்கே இராணுவம் விரும்புகின்றது. அதற்கு ஒத்துழைக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்வதாக,
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.