எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நாளை கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு அழைப்பு
--க-சரவணன்-

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு கிழக்கு மக்கள் தங்களது முழு ஆதரவினை தெரிவிக்குமுகமாகவும் பேரணியை வலுவூட்டுமுகமாகவும் அன்றைய தினம் 16 ம் திகதி திங்கட்கிழமை  கிழக்கு முழுவதிலும் பூரண கதவடைப்பினை மேற்கொள்ளுமாறு கிழக்கு மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது

தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக் குழு 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்து ஊடக அறிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (15)  வெளியிட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஜெனிவாவில் ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில், தங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதில் சர்வதேசத்திற்கும் பாரிய பங்குள்ளது என்பதினை  சர்வதேசத்துக்கு இடித்துரைக்கும் வகையில் தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோசங்களை முன்வைத்து யாழ் மண்ணில்; எதிர்வரும் 16ந் திகதி திங்கட் கிழமை 'எழுக தமிழ்;' எழுச்சிப் பேரணியினை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படல் வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்படல் வேண்டும், வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும், இடம் பெயர்ந்து அல்லல்படும் மக்கள் அனைவரும் அவர்களது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பனவே அக்கோசங்களாகும்

தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு வடக்கு கிழக்கு தழுவியதாக தமிழர் தாயகமெங்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறு தளங்களில் இருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ் ஆதரவுத்தளத்தினை ஒருங்கிணைத்து எழுக தமிழை பேரெழுச்சியுடன் முன்னெடுக்க ஏதுவாக வடக்கு கிழக்கு தழுவியதான பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது
அத்தருணத்திலே 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு கிழக்கு மக்கள் தங்களது முழு ஆதரவினை தெரிவிக்குமுகமாகவும் பேரணியை வலுவூட்டுமுகமாகவும் அன்றைய தினம் 16 திங்கள் அன்று கிழக்கு முழுவதிலும் பூரண கதவடைப்பினை மேற்கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு கிழக்கு மக்களிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது