அனைவருக்கும் பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை!



நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும் என அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சின் கடமைகளை நேற்று (புதன்கிழமை) மாலை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “எம்மிடம் பல கொள்கைகள் காணப்படுகின்றன. அமைச்சுக்களில் சேவையாற்றுபவர்களில் நிலைப்பாடு வேறுபட்டவையாக இருந்தாலும், அரசியல் நிலைப்பாடுகள் வேறுபட்டவையாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்ய வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்திருக்கும் விடயங்களுக்கேற்ப நாம் செயற்பட வேண்டும்.

நாட்டில் நூற்றுக்கு 98 வீதமானோருக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும். அத்தோடு நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், வீடமைப்பு திட்டங்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

கொழும்பில் தற்போது குடியிருப்புக்கள் மாத்திரம் காணப்படும் இடங்கள் என்று எந்த பிரதேசத்தையும் அடையாளப்படுத்த முடியாது. காரணம் எல்லா இடங்களிலும் எல்லா விடயங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

சில பிரதேசங்களில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்துகின்றன. இதற்காக எம்மால் யானைகளை கொல்ல முடியாது.

காரணம் யானைகள் இருக்கும் பிரதேசங்களில் நாம் தான் குடியிருப்புக்களை அமைத்திருக்கின்றோம். எனவே இவ்வாறான வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.