அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் விவசாயச்செய்கைக்கு அனுமதி - பாதுகாப்பும் தீவிரம்

(பாறுக் ஷிஹான்)
ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் விவசாயிகள் வழமை போன்று தத்தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை(24) பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் பெரிய நீலாவணை முதல் அட்டாளைச்சேனை வரையான கடற்கரைப்பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் அதிகளவான மீன்களை பிடித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை உள்ளுரில் விற்பனை செய்து வருவதுடன் எஞ்சியவைகளை கூலர் வாகனத்தில் ஏற்றி வெளிமாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு மீன்பிடித் துறையினருக்கு அந்தந்த பகுதி பொலிஸ் நிலையங்களில் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடைபோக விவசாய நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தின் தற்போது காரைதீவு நிந்தவூர் சம்மாந்துறை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இவ்விவசாயிகளுக்கு பாதுகாப்பாக வயல் நிலங்களுக்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர்.அத்துடன் ஊர்களில் பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கு உகந்த அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல பொலிஸாரின் அனுமதிகளை அந்தந்த பிரதேச செயலகங்கள் பொலிஸாரின் உதவியுடன் ஏற்பாடு செய்து வருகின்றது.

மேலும் அத்தியாவசிய உணவு மருந்துகள் மற்றும் காய்கறிகளை வாகனங்களில் கொண்டு செல்வோருக்கு பொலிஸ் நிலையங்களில் விசேட பாஸ் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

மேற்படி பகுதியில் உள்ள முக்கிய சந்திகளில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.