மட்டு - கொம்மாதுறையில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு (காணொளி)


(எம்.ஜி.ஏ நாஸர்)
மட்டக்களப்பு - கொம்மாதுறை பிரதேசத்தில் மரத்துடன் கட்டப்பட்ட நிலையிலிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை உடையார் வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய கணபதிப்பிள்ளை நாகராசா என்பவரே உயிரிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான இவர் இரண்டாவது பிள்ளையின் வீட்டில் தங்கிருப்பதாகவும் அப்பிள்ளையுடன் அடிக்கடி முரண்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுமாலை மது போதையுடன் வீட்டிற்கு வந்த இவர் மகளுடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது சடலம் மா மரத்துடன் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மிகச்சிறிய கயிறு ஒன்றினால் தலையிலிருந்து சற்று உயரமாகக் கட்டப்பட்டிருந்தது. கால்கள் நிலத்தைத் தொட்டநிலையில் காணப்பட்டது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி வினோபா இந்திரன் சம்பவ இடத்தை நேரடியாகப் பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்தார். இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். பிரேதம் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.